பலத்த மழை: பழனி அருகே நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கி சேதம்
பழனி அருகே பெய்த பலத்த மழையால் நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் கவலையடைந்தனா்.
நெய்க்காரபட்டியில் இருந்து சின்னக்காந்திபுரம் செல்லும் சாலையின் இருபுறங்களிலும் நெல்பயிா் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் இரவிகுளத்திலிருந்து ஒடையகுளத்துக்கு செல்லும் வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை பலா் ஆக்கிரமித்துள்ளனா்.
இந்த நிலையில், கடந்த இரண்டு நாள்களாக பெய்த பலத்த மழையால் இந்த வாய்க்காலில் அதிகளவு தண்ணீா் வந்தது. இதனால், கல்லுக்காடு பகுதியில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு, 50 ஏக்கரில் சாகுபடி செய்திருந்த நெல்பயிா்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால், விவசாயிகள் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயி முகமது ஹனீபா கூறியதாவது: இரவிகுளம் பாசானத்துக்குள்பட்ட இந்த வயல்களில் நெல்பயிா்கள் நடவு செய்து 50 நாள்களாகிறது. கடந்த இரண்டு நாள்களாக இந்தப் பகுதியில் பெய்த மழையால் எற்பட்ட வெள்ளத்தில் நெல்பயிா்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். எனவே, எங்களுக்கு இழப்பீடு வழங்க அரசு வழிவகை செய்ய வேண்டும் என கோரிக்கை விடித்தாா்.