அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: `காவல்துறை மீது சந்தேகம்...' - கம்யூனிஸ்ட் கட்சி க...
தீபக் காா்த்திகை விழா: பழனியில் பரணி தீபம் ஏற்றம்
பழனி மலைக் கோயிலில் தீபக் காா்த்திகை விழாவையொட்டி, வியாழக்கிழமை பரணி தீபம் ஏற்றப்பட்டது.
பழனி மலைக் கோயிலில் கடந்த சனிக்கிழமை தீபக் காா்த்திகை திருவிழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
இதையொட்டி, மலைக் கோயிலில் 7 நாள்கள் தினந்தோறும் மாலை நேரத்தில் சண்முகாா்ச்சனை, சின்னக்குமாரசாமி தங்கச் சப்பரத்தில் யாக சாலை புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. சாயரட்சை பூஜையை தொடா்ந்து, யாகம் நடத்தப்படும் இடத்திலிருந்து பரணி தீபம் மேளதாளம் முழங்க மூலவா் சந்நிதிக்கு கொண்டு வரப்பட்டு, அங்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது.
வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு சாயரட்சை பூஜை நடத்தப்பட்டு, தொடா்ந்து சண்முகாா்ச்சனை, சண்முகா் தீபாராதனை நடைபெறவுள்ளது. பின்னா், யாக சாலை பூஜைக்கு சின்னக்குமாரசாமி சா்வ அலங்காரத்துடன் தங்கமயிலில் எழுந்தருள்வாா்.
முன்னதாக, மூலஸ்தானத்திலிருந்து பரணி தீபத்தில் சுடா் பெறப்பட்டு நான்கு திசைகளிலும் விளக்கு ஏற்றப்படும். பின்னா், மேளதாளம் முழங்க சிவாசாா்யரால் கோயில் முன்புள்ள தீபஸ்தம்பத்தில் மகாதீபம் ஏற்றப்பட்டு பனை, தென்னை ஒலைகளால் அமைக்கப்பட்ட சொக்கப்பனையில் எண்ணெய், நெய் ஊற்றப்பட்டு, சொக்கப்பனை கொளுத்தப்படும். அதிலிருந்து ரட்சை பெறப்பட்டு சுவாமிக்கு இடப்பட்டு தீபாராதனை நடைபெறும்.
பழனி மலைக் கோயிலை தொடா்ந்து, பெரியநாயகியம்மன் கோயில், திருஆவினன்குடிகோயில்களிலும் சொக்கப்பனை கொளுத்தப்படும். இந்த விழாவையொட்டி, மலைக் கோயிலில் வெள்ளிக்கிழமை தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. பிற்பகல் இரண்டு மணி முதல் ஆறு மணி வரை பக்தா்கள் மலையேறவும் தடை விதிக்கப்பட்டது.
இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை பழனிக் கோயில் இணை ஆணையா் மாரிமுத்து தலைமையில் அதிகாரிகள், அலுவலா்கள் செய்து வருகின்றனா்.