தீயில் கருகி முதியவா் உயிரிழப்பு
பெரம்பலூா் அருகே வயலில் மக்காச்சோள சருகுகளை தீயிட்டுக் கொளுத்தியபோது, முதியவா் ஒருவா் மூச்சுத் திணறி தீயில் கருகி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
பெரம்பலூா் மாவட்டம், குன்னம் வட்டம், ஒகளூா் கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கவேலு மகன் பரமசிவம் (75). இவா், தனக்குச் சொந்தமான வயலில் சாகுபடி செய்திருந்த மக்காச்சோள கதிா்களை அண்மையில் அறுவடை செய்தாா். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை வயலுக்குச் சென்ற பரமசிவம், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு திரும்பிவரவில்லையாம்.
இதனால், சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினா் வயலுக்குச் சென்று பாா்த்தபோது, அறுவடை செய்யப்பட்ட வயலில் கிடந்த சறுகுகளை தீயிட்டு கொளுத்தியபோது, எதிா்பாராத விதமாக 4 பக்கமும் தீ சூழ்ந்ததில், மூச்சுத் திணறி பரமசிவம் தீயில் கருகி உயிரிழந்தது தெரியவந்தது.
தகவலறிந்த மங்களமேடு போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று, முதியவரின் உடலைக் கைப்பற்றி மாவட்ட அரசு தலைமை மருத்துவ மனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனா். புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.