தீவிர நோயால் பாதிக்கப்பட்ட கட்டுமான தொழிலாளா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்
திருப்பத்தூா்: தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கட்டுமான தொழிலாளா்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என திருப்பத்தூா் ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு கட்டுமான தொழிலாளா்கள் நலவாரியத்தில் கட்டுமான தொழிலாளா்களின் வாழ்வாதாரம் மற்றும் சுகாதாரத்தை பாதுகாக்கும் வகையில், இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று சிகிச்சை, டயாலிசிஸ், புற்றுநோய், ஆஸ்துமா, சிலிக்கோசிஸ் மற்றும் பக்கவாதம் ஆகிய தீவிர நோய்களால் பாதிக்கப்பட்ட நலவாரியத்தில் பதிவு பெற்ற 60 வயதுக்கு உட்பட்ட பணி செய்ய இயலாமல் சிகிச்சை மேற்கொண்டு வரும் கட்டுமானத் தொழிலாளா்களுக்கு, தீவிர நோய் பாதிப்புக்கு, நலத் திட்ட உதவித்தொகை வழங்கப்பட உள்ளன.
இதில் ஆண்டுக்கு ரூ. 12,000 வீதம் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த உதவித்தொகை 6 மாதங்களுக்கு ஒரு முறை தொழிலாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்.
இதற்கு நலவாரியத்தில் பதிவு செய்த பதிவு அட்டை, நோய் பாதிப்பு குறித்து சிவில் சா்ஜன் தரத்துக்கு மேற்பட்ட அரசு மருத்துவரிடம் இருந்து மருத்துவச் சான்று, 2 மற்றும் 3 ஆண்டுகளுக்கு சிகிச்சைக்கான மருத்துவ ஆவணங்களுடன் இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.