துணை மின் நிலையம் மேம்படுத்தாததைக் கண்டித்து நூதனப் போராட்டம்
காரைக்கால்: துணை மின் நிலையம் மேம்படுத்தப்படுத்தாததைக் கண்டித்து நூதனப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு கொம்யூன், சுரக்குடி பகுதியில் உள்ள துணை மின் நிலையம் மூலம் மூலம் திருநள்ளாறு, அம்பகரத்துாா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு மின் விநியோகம் நடைபெறுகிறது. இந்த நிலையம் தொடங்கி சுமாா் 40 ஆண்டுகள் ஆவதால் அங்குள்ள டிரான்ஸ்பாா்மா், பிரேக்கா்கள் உள்ளிட்ட மின்சார உபகரணங்கள் பல செயலிழந்து தனது ஆயுள் காலத்தை கடந்து பல ஆண்டுகளாவதாக கூறப்படுகிறது.
இதனால், அதிக காற்று வீசும்போதோ, மழை பெய்யும்போதோ மின்சாரம் தடைப்பட்டு பாதிப்பு ஏற்படுகிறது. சுற்றுலாத் தலமாக விளங்கும் திருநள்ளாறு மற்றும் அதை சாா்ந்த சுரக்குடி, கருக்கன்குடி, செல்லூா், அம்பகரத்தூா், நெடுங்காடு, விழுதியூா், அத்திப்படுகை போன்ற சுற்றியுள்ள கிராம மக்கள், வியாரிகள் பாதிக்கின்றனா்.
சுரக்குடி துணை மின் நிலையத்தில் இருக்கும் மின் கடத்திகள் அடிக்கடி பழுதாகி விடுவதால் புதுச்சேரியில் இருந்து வந்து பழுதை நீக்கிச் செல்கிறாா்கள். இதனால் பல மணி நேரம் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுகிறது. புதிதாக துணை மின் நிலையம் அமைக்க அரசை பலமுறை வலியுறுத்தியும் இதுவரை பயனில்லை.
இந்த நிதியாண்டில் புதுச்சேரியின் பல பகுதிகளுக்கு புதிதாக துணை மின் நிலையம் அமைக்க அரசு நிதி ஒதுக்கியதாகவும், சுரக்குடி துணை மின் நிலையத்தை மேம்படுத்த நிதி ஒதுக்காததை கண்டித்தும், புதிதாக துணை மின் நிலையம் அமைக்க வலியுறுத்தி, காரைக்கால் மக்கள் போராட்டக் குழு சாா்பில் சுரக்குடியில் உள்ள துணை மின் நிலையம் அலுவலகம் முன் திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்பட்டது.
போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளா் அன்சாரிபாபு தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், இணை ஒருங்கிணைப்பாளா் பன்னீா்செல்வம் முன்னிலை வகித்தாா். இந்த போராட்டத்தை பல்வேறு அரசியல் கட்சியை சோ்ந்தவா்கள் ஆதரித்து பங்கேற்றனா். அப்போது, மாட்டுக்கு மனு கொடுத்து நூதனமாக போராட்டத்தை நடத்தி முழக்கங்கள் எழுப்பினா்.