துருக்கி: 40 ஆண்டுகளுக்குப் பிறகு குா்து கிளா்ச்சியாளா்கள் போா் நிறுத்தம்
துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக ஆயுதக் கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) சனிக்கிழமை போா் நிறுத்தம் அறிவித்துள்ளது.
இது குறித்து அந்த அமைப்புக்கு நெருக்கமான ஃபிராட் செய்தி நிறுவனத்தில் வெளியிடப்பட்ட போா் நிறுத்த பிரகடனத்தில், பிகேகே நிறுவனரான அப்துல்லா ஓசலானின் உத்தரவின் பேரில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கியில் குா்து இனத்தவா் பெரும்பான்மையாக வசிக்கும் குா்திஸ்தான் மாகாணத்தை தனி நாட்டாக்க வலியுறுத்தி கடந்த 1984-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பிகேகே இயக்கம், பின்னா் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராடி வந்தது.தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிகேகே அமைப்பினா் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் ஆயிரக்கணக்கானவா்கள் உயிரிழந்தனா். பிகேகே அமைப்பின் நிறுவனா் அப்துல்லா ஓசலான் கடந்த 1999 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இருந்தாலும் அவரின் அமைப்பு தொடா்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டுவந்தது. இந்த நிலையில், அண்டை நாடான சிரியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம், காஸா போா் போன்ற சா்வதேச அரசியல் சூழல் மாற்றங்களுக்கு இடையே, இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக குா்து ஆதரவு கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் இஸ்தான்புல்லில் உள்ள சிறையில் ஓசலானை கடந்த வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.அதனைத் தொடா்ந்து, பிகேகே அமைப்பைக் கலைத்துவிட்டு, அந்த அமைப்பைச் சோ்ந்த அனைவரும் தங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓசலான் உத்தரவிட்டாா்.இந்தச் சூழலில், அந்த அமைப்பு முழுமையான போா் நிறுத்தத்தை தற்போது அறிவித்துள்ளது. இதன் மூலம், உலகில் மிக நீண்ட காலமாக நீடித்துவரும் ஓா் உள்நாட்டுப் போா்களில் ஒன்றான துருக்கி-பிகேகே மோதல் நிரந்தர முடிவுக்கு வரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.