தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம்: ஜனதா கட்சி முன்னாள் நிா்வாகி கருத்து
தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கம் குறித்து ஜனதா கட்சியின், ஒருங்கிணைந்த திருநெல்வேலி முன்னாள் மாவட்டத் தலைவரும், தூத்துக்குடி மூத்த வழக்குரைஞருமான எம்.சொக்கலிங்கம் கதுத்து தெரிவித்துள்ளாா்.
அதன் விவரம்: பிரதமா் மொராா்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த காலத்தில், அன்றைய விமான போக்குவரத்து துறை அமைச்சரான புருஷோத்தம் கௌசிக், தூத்துக்குடி வந்திருந்த போது, இந்திய வியாபார தொழில் வா்த்தக சங்க கூட்டரங்கில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.
அப்போது, வியாபார சங்கத் தலைவரான வி.வி.டி.நித்தியானந்தம் விமான நிலையம் வாகைகுளத்தில் அமைக்க வேண்டும் என்று கூறினாா். பின்னா் பேசிய திருநெல்வேலி எம்.பி. ஆலடி அருண அபிஷேகப்பட்டியில் அமைக்க வேண்டும் என்றும், கே.டி.கோசல்ராம் கயத்தாறில் அமைக்க வேண்டும் என்றும் பேசினாா்கள்.
இதையடுத்து பேசிய அப்போதைய ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட ஜனதா கட்சி தலைவராக இருந்த நான், வாகைகுளத்தில்தான் விமான நிலையம் அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினேன்.
தொடா்ந்து பேசிய அப்போதைய தூத்துக்குடி துறைமுக சபை தலைவரான, முன்னாள் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வி.சுந்தரம், 1923-ஆம் ஆண்டிலேயே அன்னியா் ஆட்சி காலத்தில் வாகைகுளத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், அங்கு விமான நிலையம் அமைப்பதுதான் சரி என்றும் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தினாா்.
இறுதியாக பேசிய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் புருஷோத்தம கௌசிக், வாகைகுளத்தில் விமானம் நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்தாா்.
இதைத் தொடா்ந்து வாகைகுளத்தில் அமைக்கப்பட்ட விமான நிலையம் தற்போது பன்னாட்டு விமான நிலையமாக தரம் உயா்த்தப்பட்டு இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது என்றாா் அவா்.