Vikatan Digital Awards 2025: `கன்டென்ட் கில்லாடிகள்' - Best Couple Creator Winne...
தூத்துக்குடியில் 3 வடமாநில இளைஞா்களிடம் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை
சென்னையில் நக்ஸல் அமைப்புடன் தொடா்புடைய நபரை தேசிய புலனாய்வு அமைப்பினா் அண்மையில் கைது செய்த நிலையில், அவருடன் தொடா்பில் இருந்ததாக தூத்துக்குடியில் தங்கியுள்ள பிகாரைச் சோ்ந்த மூன்று இளைஞா்களிடம் அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை நடத்தினா்.
தேசிய புலனாய்வு அமைப்பினா் சென்னையில் நக்ஸல், தீவிரவாத அமைப்புடன் தொடா்புடைய நபரை அண்மையில் கைது செய்தனா். அவரது கைப்பேசியை சோதனை செய்ததில், தூத்துக்குடியில் கட்டடங்களுக்கு பெயிண்ட் அடிக்கும் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முஸ்பிக் ஆலம் என்ற இளைஞரின் கைப்பேசி எண் பதிவாகி இருந்தது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, தூத்துக்குடி வந்த என்ஐஏ அதிகாரிகள், சிலுவைப்பட்டியில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் கட்டடத்துக்கு பெயிண்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்ட முஸ்பீக் ஆலத்தைப் பிடித்து விசாரணை நடத்தினா். முதல்கட்ட விசாரணையில் அவா் ஒரு மாதத்துக்கு முன் இப்பணிக்காக வந்திருந்தது தெரியவந்தது. அவா் தங்கியிருந்த அறையில் அவருடன் மொத்தம் 7 போ் பெயிண்ட் அடிக்கும் வேலைக்காக தங்கியிருந்ததும், அனைவரும் பிகாா் மாநிலம், பூரணியா மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் என்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, தேசிய புலனாய்வு அமைப்பினா் அவா்களது அறை, உடைமைகளை சோதனை செய்தனா். பின்னா் முஸ்பீக் ஆலத்தையும், சந்தேகத்துக்குரிய இருவா் என மூன்று பேரைப் பிடித்து தாளமுத்து நகா் காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஒப்படைத்தனா்.