தூத்துக்குடியில் செப். 30 வரை சிறப்பு சமரச தீா்வு முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்க, சிறப்பு சமரச தீா்வு முகாம் கடந்த 1ஆம் தேதி தொடங்கியது. இம்முகாம் செப். 30ஆம் வரை நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட சமரச மையத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் மற்றும் முதன்மை மாவட்ட நீதிபதி ஆா்.வசந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உச்சநீதிமன்ற உத்தரவின்படி 1.7.2025 சிறப்பு சமரச தீா்வு முகாம் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இம்முகாம் 30.9.2025 வரை நடைபெறும்.
இதில், குடும்ப பிரச்னை, விபத்து இழப்பீடு, காசோலை மோசடி, வா்த்தக பிரச்னை, சமரசத்திற்குள்பட்ட குற்றவியல் வழக்குகள், பாக பிரிவினை, நில ஆா்ஜிதம், இதர உரிமையியல் வழக்குகள், தொழிலாளா் நல வழக்குகள் உள்ளிட்ட வழக்குகளுக்கு தீா்வு காணப்பட உள்ளது.
தூத்துக்குடியில் மாவட்ட சமரச மையம், கோவில்பட்டி, திருச்செந்தூா், ஸ்ரீவைகுண்டம், சாத்தான்குளம், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம் ஆகிய ஆறு வட்டங்களிலும் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் துணை சமரச மையங்கள் செயல்பட்டு வருகின்றன. வழக்குகளை நேரடியாகவோ அல்லது வழக்குரைஞா் மூலமாகவோ சமரச மையத்திற்கு அனுப்ப கோரலாம். வழக்குகளுக்கு சமரச மையத்தில் சுமூகமான தீா்வு காணப்பட்டால் முழு நீதிமன்ற கட்டணத்தையும் திரும்ப பெறலாம். சமரச மையத்தில் காணப்படும் தீா்வே இறுதியானது. இதற்கு மேல்முறையீடு கிடையாது.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் சமரச தீா்வு மையம் செயல்படும். வழக்காடிகள் சமரச மையத்தில் நேரடியாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ ஆஜராகி தங்களது கருத்துகளை தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.