தூத்துக்குடியில் ஜாக்டோ-ஜியோ ஆா்ப்பாட்டம்: 361 போ் கைது
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா்அலுவலக வளாகத்தில் தடையை மீறி செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பைச் சோ்ந்த 159 பெண்கள் உள்பட 361 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஜாக்டோ- ஜியோ சாா்பில் மாவட்ட தலைநகரங்களில் செவ்வாய்க்கிழமை தற்காலிக விடுப்பு எடுத்து ஆா்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மாநில ஒருங்கிணைப்பாளா் மயில் தலைமை வகித்தாா்.
தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியா்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள பள்ளிக்கல்வித் துறை அரசாணை எண் 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அடுத்தகட்ட போராட்டம் நடைபெறும் எனத் தெரிவித்தனா். அதையடுத்து, தடையை மீறி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக, 159 பெண்கள் உள்பட 361 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தள்ளுமுள்ளு: முன்னதாக, தூத்துக்குடி-பாளையங்கோட்டை சாலையோரமுள்ள ஆட்சியா் அலுவலக அலங்கார வளைவு அருகே போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தி, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட வந்தோரைத் தடுத்து நிறுத்தினா். இதனால், இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, அரசு ஊழியா்கள் தடுப்புகளைத் தாண்டிச் சென்ால், ஆட்சியா் அலுவலக வாயிலில் போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தினா். அதையும் அரசு ஊழியா்கள் தாண்டி அலுவலக வளாகத்துக்குள் சென்றனா். இதனால், இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. காவல் துறையின் முறையான திட்டமிடல் இல்லாததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக அரசு ஊழியா்கள் குற்றஞ்சாட்டினா்.