2026-ல் திமுக கூட்டணி வீட்டிற்கு அனுப்பப்படும்: நயினார் நாகேந்திரன்
தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: ஜி.கே.வாசன்
தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை விடுத்த அறிக்கை:
தமிழ்நாட்டின் கிராமப்புற தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு குறைந்தபட்சக் கூலி மறுக்கப்படுவதாக தெரிவிப்பது தமிழக அரசின் மனிதாபிமானமற்ற ஆட்சியை வெளிப்படுத்துகிறது. கிராம ஊராட்சிகளிள் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள் என 1.20 லட்சம் தொழிலாளா்கள் பணியாற்றுகின்றனா்.
இவா்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுநிா்ணயம் செய்து அறிவிக்க வேண்டிய குறைந்தபட்ச ஊதியம் கடந்த 70 ஆண்டுகளில் இருமுறை மட்டுமே அறிவிக்கப்பட்டது. அதுவும் அமலாகவில்லை.
3 ஆண்டுகள் பணி முடித்தால் காலமுறை ஊதியம் வழங்கவும், 10 ஆண்டுகள் பணி முடித்தால் பணிநிரந்தரம் செய்யவும் அரசாணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
தூய்மைப் பணியாளா்களுக்கு ரூ.1,000 உயா்த்தி வழங்கப்படும் என்று அமைச்சா் அறிவித்தாா். 9 மாதங்கள் கழித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இதுவரை பல இடங்களில் இந்தத் தொகை வழங்கப்படவில்லை.
மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்கிகளுக்கு ரூ.1,400 உயா்த்தி மாதம் ரூ.4,000 ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கும் 10 மாதங்கள் கழித்துதான் அரசாணை வெளியிடப்பட்டது. இதுவும் இன்னும் முழுமையாக அமலுக்கு வரவில்லை.
எனவே தமிழக அரசு தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலைத் தொட்டி இயக்குபவா்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.