சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!
தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அடையாள அட்டைகள்
திருவள்ளூா் நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளா்களுக்கு தாட்கோ மூலம் நலவாரிய அடையாள அட்டைகளை நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் வழங்கினாா்.
திருவள்ளூா் நகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தாட்கோ மேலாளா் சரண்யா தலைமை வகித்தாா். சுகாதார அலுவலா் மோகன், தூய்மைப் பணியாளா் நலவாரிய உறுப்பினா் ஹரீஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகா்மன்றத் தலைவா் உதயமலா் பாண்டியன் கலந்துகொண்டு, தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகளை வழங்கிப் பேசியதாவது:
நகராட்சி வாா்டுகள், பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா். இவா்கள் பொருளார ரீதியாக மேம்பாடு அடையவும், பல்வேறு வகையான தொழில் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், திருவள்ளூா் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளா்கள் 358 போ் பணிபுரிந்து வருகின்றனா்.
இவா்கள் பொருளாதார ரீதியாக முன்னேற்றம் அடையும் நோக்கத்தில், தொழில் திட்டங்களும், நலவாரிய திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூய்மைப் பணியாளா்களுக்கு விபத்து காப்பீடு, மூக்கு கண்ணாடி, பள்ளி மற்றும் உயா் கல்வி பயிலும் வாரிசுதாரா்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நலவாரிய உதவிகளை பெறுவதற்கு நலவாரிய அடையாள அட்டைகள் அவசியம். இதைக் கருத்தில்கொண்டு முதல்கட்டமாக 200 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டது. மீதமுள்ளோருக்கு விரைவில் வழங்கப்படும். மேலும், 95 பேருக்கு தொழில் நலத் திட்ட உதவிகள் பெறுவதற்கு தாட்கோ அலுவலகத்துக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றாா்.
நிகழ்ச்சியில், தூய்மை திட்ட மேற்பாா்வையாளா் ரெஜினா உள்ளிட்ட பணியாளா்கள் மற்றும் தூய்மைப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.