'தென் ஆப்பிரிக்காவிற்கே சென்றுவிட வேண்டியது தான்' - மீண்டும் வலுக்கும் ட்ரம்ப் - மஸ்க் மோதல்!
'ஒன் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில்' - இந்தப் பெயரை அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் உச்சரித்ததில் இருந்து தான், அவருக்கும், அவரது உற்ற நண்பன் எலான் மஸ்கிற்கு வாய்க்கால் வரப்பு தகராறு தொடங்கியது.
இந்தப் பில்-லுக்கு பொதுவெளியில் எலான் மஸ்க் கருத்து தெரிவித்ததில் தொடங்கிய இந்தத் தகராறு இன்னும் ஓய்ந்தபாடில்லை. ட்ரம்ப் குறித்து தொடர்ந்து அவதூறாக பதிவிட்டு வந்த மஸ்க்கை, 'அதிக வரி விதிப்பு' என்ற காயைக் காட்டி பேக் அடிக்க வைத்தது ட்ரம்ப் அரசு.
அதன் பிறகு, 'எல்லை மீறி பேசிவிட்டேன்... இப்போது வருத்தப்படுகிறேன்' என்று மன்னிப்பு கேட்கும் தொனியில் பதிவிட்ட மஸ்க், அதன் பிறகு கொஞ்சம் அடக்கியே வாசித்தார்.

எலான் மஸ்க்கின் நேற்றைய பதிவுகள்
இந்த நிலையில், மீண்டும் பிக் அண்ட் பியூட்டிஃபுல் பில் பேச்சு அடி பட, எலான் மஸ்க், நேற்று தனது எக்ஸ் பக்கத்தில், "இந்தப் பைத்தியகரத்தனமான சட்டம் அமல்படுத்தப்பட்டால், அடுத்த நாளே, `அமெரிக்கா கட்சி’ தொடங்கப்படும்.
நமது நாட்டிற்கு ஜனநாயக - குடியரசு ஒற்றை கட்சிக்கு மாற்று வேண்டும். அப்போது தான், மக்கள் குரல் பெறுவார்கள்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்தப் பதிவிற்கு முந்தைய பதிவில், 'அரசாங்கத்தின் செலவை குறைப்பேன் என்று பிராசாரம் செய்துவிட்டு, அமெரிக்காவின் கடனை பெரியளவில் அதிகரிக்கும் சட்டத்திற்கு உடனடியாக வாக்களித்த அனைத்து காங்கிரஸ் உறுப்பினர்களும், வெட்கி தலை குனிய வேண்டும்.
மேலும், என்ன ஆனாலும், அவர்கள் அடுத்த ஆண்டு நடக்க உள்ள பிரைமரி தேர்தலில் தோற்பதை உறுதி செய்வேன்" என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் பதிவுகளின் மூலம், எலான் மஸ்க் ட்ரம்பின் இந்த சட்டத்திற்கு மீண்டும் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளார். இவரது கருத்துகளுக்கு அமெரிக்காவில் ஆதரவுகளும் அதிகம் பெறுகிறது.
ட்ரம்ப் பதில் பதிவு
ஆனால், எலான் மஸ்க்கின் இந்தக் கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில், "எலான் மஸ்க் தேர்தலில் என்னை ஆதரிப்பதற்கு முன்பே, அவருக்கு நன்கு தெரியும், நான் எலெக்ட்ரிக் வாகனங்களின் சலுகைகளுக்கு எதிரானவன் என்று. இது என்னுடைய தேர்தல் பிரசாரத்தின் மிக முக்கிய பகுதி ஆகும்.
எலெக்ட்ரிக் கார்கள் என்பது நல்லது தான். ஆனால், அனைவரும் ஒன்றை வாங்க வேண்டும் என்று வற்புறுத்த முடியாது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு, எலானுக்கு அதிக சலுகைகள் கிடைத்துள்ளது.
இந்த சலுகைகள் இல்லையென்றால், அவர் தனது கடையை மூடிவிட்டு, தென் ஆப்பிரிக்காவிற்கு சென்றுவிட வேண்டியது தான்.
பின்பு, ராக்கெட்டுகள், சாட்டிலைட்டுகள், எலெக்ட்ரிக் கார் உற்பத்தி எதுவும் இருக்காது. இதன் மூலம், நம் நாடு லாபம் அடையும். DOGE இதுகுறித்து பார்க்க வேண்டும். பெரிய அளவிலான பணம் காப்பாற்றப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
இது எலான் மஸ்கிற்கு மறைமுகமான மிரட்டல் என்றே கருதலாம்.