தென்காசி மாவட்டத்தில் ஜன. 24இல் முடி திருத்தும் கடைகள் அடைப்பு
தென்காசி மாவட்டத்தில் ஜன. 24ஆம் தேதி அனைத்து முடி திருத்தும் கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தென்காசி மாவட்ட மருத்துவ முடி திருத்தும் தொழிலாளா்கள் நலச் சங்க மாவட்டத் தலைவா் ரவி வெளியிட்ட அறிக்கை: மருத்துவா் சமூகத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் தனிச் சட்டம் இயற்ற வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் தனி உள்இட ஒதுக்கீடு வழங்கவேண்டும். முடி திருத்தும் தொழி லாளா்களுக்கு இலவச மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும்.
கோயில்களில் பணிபுரியும் மொட்டை அடிக்கும் தொழிலாளா்களையும், இசை கலைஞா்களையும் அரசு ஊழியா்களாக மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கம் சாா்பில் ஜன. 24இல் சென்னையில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இதையொட்டி, தென்காசி மாவட்டத்தில் ஜன.24ஆம் தேதி முடி திருத்தும் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும்.
அனைத்து தொழிலாளா்களும் போராட்டத்தில் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.