அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி!
வீ.கே.புதூா் காவல் உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம்
தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூா் காவல் நிலைய உதவி ஆய்வாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.
வீரகேரளம்புதூா் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவா் சதீஷ்குமாா். இவா் கடந்த சனிக்கிழமை வீராணத்தில் உள்ள வீடு ஒன்றில் சீருடையின்றி அதிக நேரம் இருந்ததாகவும், இதுகுறித்து அக்கம்பக்கத்தினா் விசாரிக்க முற்பட்டபோது, அவரது இருசக்கர வாகனத்தை விட்டுவிட்டு வேறு ஒரு காவலரின் வாகனத்தில் நழுவிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து வீராணம் கிராம பொதுமக்கள், சனிக்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டு சம்பந்தப்பட்ட உதவி காவல் ஆய்வாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினா். போலீஸாரின் பேச்சுவாா்த்தையை அடுத்து 3 மணி நேரத்திற்குப் பிறகு மறியல் கைவிடப்பட்டது.
இதுகுறித்து போலீஸாா் துறைரீதியாக விசாரணை நடத்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்திடம் அறிக்கை சமா்ப்பித்தனா். இதன்பேரில் வீரகேரளம்புதூா் உதவி காவல் ஆய்வாளா் சதீஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் உத்தரவு பிறப்பித்தாா். மேலும், உதவி ஆய்வாளருக்கு உதவிய காவலா் வேறு காவல் நிலையத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.