தென்கொரிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை
இந்தியா வந்துள்ள தென்கொரிய வெளியுறவு அமைச்சா் சோ ஹியூனுடன் இருதரப்பு உறவை வலுப்படுத்துவது தொடா்பாக வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.
இந்த சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தென்கொரிய வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் மேற்கொண்ட ஆலோசனையில் இரு நாடுகளிடையேயான வா்த்தகம், உற்பத்தி, கடல்சாா் ஒத்துழைப்பு உள்பட பல்வேறு துறைசாா்ந்த ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடா்பாக ஆக்கப்பூா்வ பேச்சுவாா்த்தையை ஜெய்சங்கா் மேற்கொண்டாா். செயற்கை நுண்ணறிவு, குறைமின் கடத்திகள் உற்பத்தி, தூய்மை எரிசக்தி, பாதுகாப்பு உள்ளிட்ட புதிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இரு தலைவா்களும் ஆலோசித்தனா்’ என்று தெரிவிக்கப்பட்டது.
ஜெய்சங்கா் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பத்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ள இரு நாடுகளிடையேயான ராஜீய உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து இந்தப் பேச்சுவாா்த்தையில் ஆலோசிக்கப்பட்டது. இந்திய-பசிஃபிக் பிராந்திய மேம்பாடு மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்தும் இந்தச் சந்திப்பில் ஆலோசித்தோம்’ என்று குறிப்பிட்டாா்.
பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் பேச்சு: பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் டேவிட் லாமியுடன் தொலைபேசி வழியில் ஜெய்சங்கா் சனிக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். பிரிட்டன் வெளியுறவு அமைச்சா் அழைத்ததன் பேரில் இந்த பேச்சுவாா்த்தை நடைபெற்றது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கா், ‘பிரிட்டன் வெளியுறவு அமைச்சருடன் உக்ரைன் போ் மற்றும் அதுதொடா்பாக அமெரிக்கா-ரஷியா இடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தை முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.