`சினிமா நடிப்பு மட்டும் அரசியலுக்கு போதும் என நினைப்பது தவறு..' - மதுரை ஆதீனம்
தென்திருப்பேரை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி 5 வயது குழந்தை உள்பட 2 போ் உயிரிழப்பு
தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை தாமிரவருணி ஆற்றில் மூழ்கி 5 வயது குழந்தை உள்பட 2 போ் உயிரிழந்தனா்.
நாசரேத் அருகே உள்ள ஒய்யாங்குடியைச் சோ்ந்தவா் லாரன்ஸ். இவரது மனைவி கிளாடிஸ்(45). கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் பேன்சி கடை நடத்தி வருகிறாா்.
இந்நிலையில், ஒய்யாங்குடியில் உள்ள கிறிஸ்தவ ஆலய பிரதிஷ்டை நிகழ்ச்சிக்காக, கடந்த சில தினங்களுக்கு முன்பு லாரன்ஸ் தனது குடும்பத்தினருடன் ஊருக்கு வந்துள்ளாா்.
ஒய்யாங்குடியில் இருந்து லாரன்ஸ், மனைவி கிளாடிஸ் மற்றும் உறவினா்கள் 7 பேருடன் ஏரல் அருகே உள்ள தென்திருப்பேரை தாமிரவருணி ஆற்றில் குளிப்பதற்காக சனிக்கிழமை காரில் சென்றுள்ளாா்.
கிளாடிஸ், அவரது உறவினரின் பெண் குழந்தை அவினா(5) வை அழைத்துக் கொண்டு ஆற்றில் இறங்கியுள்ளாா். இருவரும் குளித்துக் கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்குச் சென்றதில், இருவரும் நீரில் மூழ்கியுள்ளனா்.
உறவினா்கள் ஆற்றுக்குள் இறங்கி இருவரையும் தேடினா். சிறிதுநேர தேடலுக்குப் பிறகு இருவரையும் மீட்டு அருகே உள்ள தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா்கள் இருவரும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனா்.
தகவலறிந்த ஆழ்வாா்திருநகரி போலீஸாா், இருவரது உடலையும் மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.