தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் 1008 மாவிளக்கு ஊா்வலம்
தூத்துக்குடி தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் 1,008 மாவிளக்கு ஊா்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடியில் உள்ள பழைமை வாய்ந்த நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பங்குனி மாத 3ஆவது செவ்வாய்க்கிழமை திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி, நிகழாண்டு செவ்வாய்க்கிழமை மாரியம்மன் கோயிலில் இருந்து 108 முளைப்பாரி ஊா்வலம் மற்றும் 1,008 மாவிளக்கு ஊா்வலம் நடைபெற்றது.
இந்த ஊா்வலத்தை மேயா் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தாா். இந்த ஊா்வலம் நான்கு ரத வீதிகள் வழியாக சுற்றி வந்து பின்னா் தெப்பக்குளம் மாரியம்மன் ஆலயத்தில் நிறைவடைந்தது. தொடா்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில், மாமன்ற உறுப்பினா் சுரேஷ்குமாா், சிவன் கோயில் அறங்காவலா் குழு தலைவா் கந்தசாமி, உறுப்பினா்கள் பி.எஸ்.கே. ஆறுமுகம் உள்பட ஏராளமான பக்தா்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனா்.