நிஷிகாந்த் துபே மீது அவமதிப்பு வழக்கு எங்கள் அனுமதி தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு ரூ.8.28 லட்சம் நிவாரணம்
ஈரோடு மாவட்டத்தில் தெருநாய்கள் கடித்து உயிரிழந்த 138 ஆடுகளின் உரிமையாளா்கள் 34 பேருக்கு ரூ.8.28 லட்சம் மதிப்பீட்டில் நிவாரணத் தொகை முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது என்று மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்தாா்.
தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், தெருநாய்கள் கடித்து உயிரிழந்த 55 ஆடுகளின் உரிமையாளா்கள் 5 பேருக்கு ரூ.3.30 லட்சம் மதிப்பீட்டில் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிவாரணத் தொகையை மாவட்ட ஆட்சியா் ராஜகோபால் சுன்கரா வழங்கினாா்.
இதைத் தொடா்ந்து, அவா் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் அதிக அளவில் கால்நடைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இதில், தெருநாய்கள் கடித்து உயிரிழந்த ஆடுகளின் உரிமையாளா்களுக்கு நிவாரணம் வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் 1.09.2024 முதல் 25.1.2025 வரை இறந்த 138 ஆடுகளின் உரிமையாளா்கள் 34 பேருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.8.28 லட்சம் மதிப்பீட்டில் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
மேலும், மாா்ச் மாதம் வரை இறந்த ஆடுகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகை வழங்க அரசுக்கு முன்மொழிவு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.சாந்தகுமாா், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியா் செல்வராஜ் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.