தெலுங்கு திரையுலகில் யோகி பாபு! நடிகர் பிரம்மானந்தமுடன் கைகோக்கிறார்!
நடிகர் யோகி பாபு, பிரபல நகைச்சுவை நடிகர் பிரம்மானந்தத்தின் புதிய திரைப்படத்தின் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகின்றார்.
தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம்வருபவர் யோகி பாபு. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்பட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தது மட்டுமில்லாமல் சில படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார்.
இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடித்து வெளியான “மண்டேலா” திரைப்படம் 2 தேசிய விருதுகளை வென்றது.
இந்நிலையில், இயக்குநர் முரளி மனோஹர் ரெட்டி மற்றும் நடிகர் பிரம்மானந்தம் கூட்டணியில், “குர்ராம் பாப்பி ரெட்டி” எனும் புதிய திரைப்படம் உருவாகி வருகின்றது.
இந்தத் திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இதன்மூலம், நடிகர் யோகி பாபு தெலுங்கு திரையுலகில் அறிமுகமாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் உருவாகி வரும் இந்தப் படத்தில், தற்போது யோகி பாபுவும் இணைந்துள்ளது தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
சமீபத்தில், நடிகர் பிரம்மானந்தததின் அழைப்பின் பேரில் யோகி பாபு அவரது வீட்டுக்குச் சென்றிருந்தார். நீண்ட நேர உரையாடல்களுக்கு பின், யோகி பாபுவுக்கு, ”நான் பிரம்மானந்தம்” எனும் தனது புத்தகத்தை அவர் பரிசளித்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தலைவா முகத்தைப் பார்க்கணும்... ரஜினியால் ரசிகர்கள் உற்சாகம்!