எல்லா கஷ்டங்களுக்கும் ஒரே நிரந்தரத் தீர்வு பிரம்மஹத்தி பரிகார ஹோமம்; ஒரு மண்டலத்...
வியத்நாம் டூ தூத்துக்குடி.! வின்ஃபாஸ்ட் கார்களில் என்னென்ன எதிர்பார்க்கலாம்?!
தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் வின்ஃபாஸ்ட் கார்களின் சிறப்பம்சங்கள் என்னென்ன, விலை எவ்வளவு என்பது பற்றி பார்க்கலாம்.
முத்துநகரமாக தூத்துக்குடியில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் நோக்கில் வியத்நாமைச் சேர்ந்த எலெக்ட்ரிக் கார் நிறுவனமான வின்ஃபாஸ்ட் நிறுவனத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த திங்கள்கிழமையன்று துவங்கி வைத்தார். முதற்கட்டமாக ரூ.1,119 கோடியில் 114 ஏக்கர் நிலத்தில் வின்ஃபாஸ்ட் தொழிற்சாலை அமைக்கப்பட்டு, 50000 கார்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் சார்பில் விஎஃப் 6 மற்றும் விஎஃப்7 ஆகிய இரண்டு வேரியண்ட்களில் கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த காரின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதைப் பற்றி பார்க்கலாம்.
வின்ஃபாஸ்ட் 7
வின்பாஸ்ட் நிறுவனத்தின் விஎஃப்7 எலெக்ட்ரிக் காரானது, 70.8 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரி பேக்குடன் சந்தைகளில் அறிமுகமாகியுள்ளது.
19 அங்குல சக்கரங்கள், லெவல்-2 அடாஸ் பாதுகாப்பு, ஹெட்அப் டிஸ்பிளே, எல்இடி விளக்குகள், டியூல் சோன் ஏ.சி., வேகான் லெதர் உள் அலங்காரங்கள், முன்பக்க இருக்கையில் வென்டிலேசன் வசதி, எட்ஜ் டூ எட்ஜ் பனோரமிக் ரூப் என பெர்பாமன்ஸிலும், வடிவமைப்பிலும் சிறப்பானதாக, இந்த எலெக்ட்ரிக் காரை தயாரித்துள்ளனர்.
கேபிள்கள் தேவையில்லாமல் ஸ்மார்ட்போன்களை வசதியாக சார்ஜ் செய்யும் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. குரல் கட்டுப்பாடு மற்றும் செய்யறிவு உதவியும் கொடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு அம்சமாக 8 காற்றுப்பைகளும், 360 டிகிரி கேமரா வசதியும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த கார் ஒருமுறை சார்ஜ் ஏற்றினால், 450 கிமீ வரை செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெட் பிளாக், டெசாட் சில்வர், இன்ஃபினிட்டி பிளாங்க், கிரிம்சன் ரெட், ஜெனித் கிரே மற்றும் அர்பன் மிண்ட் உள்ளிட்ட வண்ணங்களில் இந்த கார் கிடைக்கிறது.
வின்ஃபாஸ்ட் 6
விஎப்7 மாடலை போலவே, இந்த காரும் எஸ்யூவி வகையை சேர்ந்ததாகத்தான் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 59.6 கிலோவாட்ஸ் ஹவர் பேட்டரியை பொருத்தியுள்ளனர்.
இதன் சக்கரத்தின் அளவு 18 அங்குலம். இதிலும் லெவல்-2 அடாஸ் பாதுகாப்பு வசதிகள் நிறைந்துள்ளன. எல்இடி லைட்டிங், கலெக்டட் கார் வசதி, ஹெட் அப் டிஸ்பிளே, இருவண்ண உள் அலங்காரம், பரந்து விரிந்த பனோரமிக் ரூப் வசதிகள் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் நிறைந்துள்ளன. இந்த கார் ஒரு முறை சார்ஜ் ஏற்றினால், 399 கி.மீ வரை செல்லும் திறன் பெற்றுள்ளது.
குறிப்பிடத்தக்க அம்சமாக காருக்குள் விடப்படும் செல்லப்பிராணிகளுக்கு பாதுகாப்பான சூழலைப் பராமரிக்க உதவும் ஒரு தனித்துவமான அம்சமும் கொடுக்கப்பட்டுள்ளது.
கிரிம்சன் ரெட், ஜெனித் கிரே, அர்பன் மின்ட், ஜெட் பிளாக், டெசாட் சில்வர் மற்றும் இன்ஃபினிட்டி பிளாங்க் உள்ளிட்ட வண்ணங்களில் இந்த கார் கிடைக்கிறது
விலை எவ்வளவு?
எக்ஸ்-ஷோரூமின் அதிகாரபூர்வ விலை இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், விஎஃப்6 ரூ. 20.99 லட்சம் முதல் ரூ. 22.99 லட்சம் வரையிலும், விஎஃப் 7 ரூ. 24.99 முதல் ரூ. 27.99 லட்சம் வரையிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.