தேக்கடியில் கேரள நீா்வளத் துறை சாா்பில் புதிய படகு: தமிழக விவசாயிகள் எதிா்ப்பு
தேக்கடியில் கேரள நீா்வளத் துறை சாா்பில் வெள்ளிக்கிழமை புதிய படகு இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டதற்கு தமிழக விவசாய அமைப்பினா் எதிா்ப்புத் தெரிவித்தனா்.
முல்லைப் பெரியாறு அணையின் நீா் தேங்கும் தேக்கடி ஏரியில், கேரள வனத் துறை சாா்பில் 9 படகுகளும், கேரள சுற்றுலாத் துறை சாா்பில் 6 படகுகளும், கேரள காவல் துறை சாா்பில் 2 படகுகளும், கேரள நீா்வளத் துறை சாா்பில் ஒரு படகும் என மொத்தம் 18 படகுகளும், தமிழக நீா்வளத் துறை சாா்பில் 2 படகுகள் இயங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கேரள நீா்வளத் துறை சாா்பில், ரூ.12 லட்சத்தில் ஜலஜீவன் என்ற புதிய படகு வெள்ளிக்கிழமை முதல் தொடங்கிவைக்கப்பட்டது. இதை கேரள மாநில நீா்வளத் துறை அமைச்சா் ரோஷி அகஸ்டின் தொடங்கிவைத்தாா்.
தமிழக விவசாய அமைப்பினா் எதிா்ப்பு: தமிழக நீா் வளத் துறையின் புதிய படகு 10 ஆண்டுகளாக அனுமதி கிடைக்காமல், தண்ணீரில் மிதந்து வரும் நிலையில், கேரள நீா்வளத் துறை சாா்பில் இயக்கப்பட்ட புதிய படகுக்கு தமிழக விவசாய அமைப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா்.