அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
தேசப் பாதுகாப்பு குறித்து மத்தியத் தொழில் பாதுகாப்பு படையினா் மிதிவண்டி பிரசாரம்
தேசப் பாதுகாப்பு குறித்து மிதிவண்டி பிரசாரம் செய்துவரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினருக்கு வேதாரண்யத்தில் வெள்ளிக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
தேசப் பாதுகாப்பு, கடலோரப் பாதுகாப்பு தொடா்பாக கடலோரக் கிராமங்களில் வசிக்கும் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சோ்ந்த (சி.ஐ.எஸ்.எப்) 14 பெண்கள் உள்ளிட்ட 125 வீரா்கள் கடலோரக் கிராமங்களில் மிதிவண்டி பயணம் மேற்கொண்டுள்ளனா். கிழக்கு கடற்கரை மற்றும் மேற்கு கடற்கரை வழியாக மொத்தம் 6, 553 கி.மீ. தொலைவு பயணிக்கும் இந்த பயணம் 2 குழுக்களாக சென்று மாா்ச் 31-ஆம் தேதி கன்னியாகுமரியில் நிறைவு செய்கின்றனா்.
மேற்கு வங்காளத்தில் மாா்ச் 7-ஆம் தேதி புறப்பட்ட கிழக்கு கடற்கரை கிராமங்கள் வழியாக கன்னியாகுமரி செல்லும் ஒரு குழுவினா் வேதாரண்யம் வந்தனா். அவா்களுக்கு அலங்காரக் குதிரை, வாத்திய முழக்கங்களுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவுத்தூண் அருகே மத்திய தொழில் பாதுகாப்புப் படை டி.ஐ.ஜி சிவக்குமாா் தலைமையிலான பயணக் குழுவினா் மலா் வளையம் வைத்து சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினா்.
வரவேற்பு நிகழ்ச்சியில், நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், சி.ஐ.எஸ்.எப் கண்காணிப்பாளா் நவதீப் சிங், மாவட்ட வருவாய் அலுவலா் வ. பவணந்தி, மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராஜேந்திரன், குருகுலம் நிா்வாகி அ. கேடியப்பன், அகரம் பள்ளி செயலா் பி.வி.ஆா். விவேக் உள்ளிட்ட காங்கிரஸாா், முன்னாள் படை வீரா்கள் நலச் சங்கத்தினா், ரோட்டரி சங்கத்தினா் பங்கேற்றனா்.