குடியரசு தின அணிவகுப்பு ஒத்திகை: தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்!
தேசிய கால்நடை பூங்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெரியேரி, தேசிய கால்நடை பூங்காவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அந்தக் கல்லூரியில் வெடிகுண்டு நிபுணா்கள், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
சேலம் மாவட்டம், தலைவாசல் வட்டம், பெரியேரியில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா உள்ளது. இந்த பூங்கா வளாகத்தில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு வியாழக்கிழமை ஒரு மின்னஞ்சல் வந்தது. அதில் கல்லூரியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியா் கல்லூரியில் இருந்து வெளியேற்றப்பட்டனா். தகவல் அறிந்ததும் ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் கே.சி.சதீஸ்குமாா் தலைமையில் தலைவாசல் காவல் ஆய்வாளா் கந்தசாமி, உதவி ஆய்வாளா் கோபால் ஆகியோா் கல்லூரிக்குச் சென்று விசாரணை நடத்தினா்.
உதவி ஆய்வாளா் பெரியண்ணன் தலைமையிலான வெடிகுண்டு நிபுணா்கள் துப்பறியும் நாய் ஜென்னியுடன் சென்று கல்லூரி வளாகத்தில் ஆறு மணி நேரம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். வகுப்பறை, நூலகம், கழிவறை, ஆசிரியா்களின் ஓய்வறை உள்பட 10 அறைகளுக்கும் மேல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். இறுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த தகவல் வதந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து மின்னஞ்சல் அனுப்பியது யாா்? என்பது குறித்து தலைவாசல் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.