``நானும் செந்தில் பாலாஜியும் பங்காளிகள்; அதற்காக..." - ஒட்டன்சத்திரம் ஐ.டி ரெய்ட...
தேசிய ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால்: திண்டுக்கல்லில் தொடக்கம்
43-ஆவது தேசிய அளவிலான ஜூனியர் மகளிர் ஹேண்ட்பால் போட்டி திண்டுக்கல்லில் திங்கள்கிழமை தொடங்கியது.
திண்டுக்கல் ஜிடிஎன் கல்லூரி வளாகத்தில் வருகிற 27ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில், தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப், பிகார், திரிபுரா உள்ளிட்ட 25 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் பங்கேற்கின்றன. போட்டி தொடக்க நிகழ்வுக்கு இந்திய ஹேண்ட்பால் சம்மேளனத்தின் பொதுச் செயலர் பிரிட்பால் சிங் சலுஜா தலைமை வகித்தார். ஜிடிஎன் கல்லூரித் தாளாளர் க.ரத்தினம் முன்னிலை வகித்தார்.
சிறப்பு அழைப்பாளர்களாக திண்டுக்கல் மாவட்ட கால் பந்துக் கழக நிர்வாகிகள் கோ. சுந்தரராஜன், எஸ். சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தனர். இதில் பங்கேற்றுள்ள 25 அணிகளும் 8 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, லீக் முறையில் போட்டிகள் நடைபெறுகின்றன.
லீக் சுற்று நிறைவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடத்தைப் பெறும் அணி நாக் அவுட் சுற்றுக்கு தேர்வு செய்யப்படும். புதுச்சேரி அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு அணியினர் 17-2 என்ற கோல் கணக்கில் எளிதாக வென்றனர்.
மற்றொரு ஆட்டத்தில் ஹிமாசல பிரதேச அணியினர் 28-1 என்ற கோல் கணக்கில் மேற்கு வங்க அணியை தோற்கடித்தனர். ஹரியாணா அணியினர் 14-0 என்ற கோல் கணக்கில் உத்தர கண்ட் அணியினரை வென்றனர்.