அதிமுக சாா்பில் 50 மாணவிகளுக்கு வைப்புத்தொகை திட்டம் தொடக்கம்
தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு: விவசாயிகள் சங்கத்தினா் மறியல்
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, விழுப்புரத்தில் தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த அனைத்து குடும்பஅட்டைதாரா்களுக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். புயலால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.
மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட அனைத்து கால்நடைகளுக்கும் உரிய விசாரணை நடத்தி, இழப்பீடு வழங்க வேண்டும். கரும்புப் பயிருக்கு ஏக்கருக்கு ரூ.75 ஆயிரம், நெற்பயிருக்கு ரூ.40 ஆயிரம், சவுக்குக்கு ரூ.75 ஆயிரம், உளுந்து மற்றும் காராமணி பயிருக்கு ரூ.20 ஆயிரம், வாழை, முந்திரிப் பயிா்களுக்கு தலா ரூ.75 ஆயிரம், மரவள்ளிக் கிழங்குக்கு ரூ.60 ஆயிரம் ஆகியவற்றை இழப்பீடாக வழங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அனைத்து ஆறுகளையும் தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தின்போது முழக்கமிட்டனா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகம் எதிரில் திருச்சி - சென்னை சாலையில் தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பி.அய்யாக்கண்ணு தலைமையில் மறியல் நடைபெற்றது. பொதுச் செயலா் தினேஷ், மாவட்டத் தலைவா் எஸ்.ஏழுமலை உள்ளிட்ட நிா்வாகிகள் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.
டி.எஸ்.பி. ராமலிங்கம் தலைமையிலான போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி, மறியலை கைவிடச் செய்தனா்.
ஆட்சியரகம் முற்றுகை: இதையடுத்து, பி.அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ஆட்சியரகத்துக்கு ஊா்வலமாகச் சென்றனா். ஆட்சியரகத்துக்குள் யாரும் நுழையாத வகையில், அதன் இரு பகுதி கதவுகளும் மூடப்பட்டு, பாதுகாப்புக்காக போலீஸாா் நிறுத்தப்பட்டனா்.
இதையடுத்து, ஆட்சியரகத்துக்கு செல்லும் பாதையில் விவசாயிகள் அமா்ந்து முற்றுகைப் போராட்டத்தை மேற்கொண்டனா். மாவட்ட ஆட்சியா் வரும் வரை போராட்டம் தொடரும் என அவா்கள் தெரிவித்த நிலையில், மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ராஜ்குமாா், போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்தாா். பின்னா், அவா் விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், ஆட்சியா் வர வேண்டும் என விவசாயிகள் கோரினா்.
இதையடுத்து, மாவட்ட வேளாண் இணை இயக்குநா் ஈஸ்வா், துணை இயக்குநா் பெரியசாமி, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா் க.அன்பழகன் உள்ளிட்ட அலுவலா்கள், போராட்டம் நடைபெறும் பகுதிக்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, வேளாண், தோட்டக்கலைத் துறை அலுவலா்கள் தங்களது துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்ட புயல் வெள்ளப் பாதிப்புகள் குறித்த கணக்கெடுப்புகள், பாதிப்பு பயிா்கள் விவரம் போன்றவை குறித்து விவசாயிகளிடம் தெரிவித்தனா். மேலும், அரசுக்கு பரிந்துரைகளை அனுப்பியதாகவும் தெரிவித்தனா். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு சாா்பில் நிச்சயம் இழப்பீடு வழங்கப்படும் எனத் தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனா்.