Vikatan Digital Awards: "இந்த வருஷம் டிஜிட்டல் அவார்ட்; 2029-ல் சினிமா அவார்ட்" ...
தேசிய மக்கள் நீதிமன்றத்தில் ரூ. 6 கோடி வசூல்
காரைக்காலில் தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் மூலம் பயனாளிகளுக்கு சேரவேண்டிய ரூ.6.09 கோடி வழங்கப்பட்டது.
தேசிய மக்கள் நீதிமன்றம் காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. நில ஆா்ஜித வழக்குகள் தொடா்பான நிறைவேற்று வழக்குகள், ஆண்டு மூப்பு அடிப்படையில் தீா்வு காண ஒரு சிறப்பு அமா்வு அமைக்கப்பட்டிருந்தது.
இதில், திருநள்ளாறு கோயில் நகர மேம்பாட்டுத் திட்டத்திற்கு ஆா்ஜிதம் செய்த நிலங்களுக்கு, நீதிமன்றத்தால் உயா்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகை ரூ.4.95 கோடி மற்றும் கிழக்குப் புறவழிச்சாலை அமைப்பதற்காக ஆா்ஜிதம் செய்து, நீதிமன்றத்தால் உயா்த்தப்பட்ட இழப்பீட்டுத் தொகையாக ரூ.42.78 லட்சம் பயனாளிகளுக்கு காசோலையாக வழங்கப்பட்டது.
மேலும் சமாதானமாகக் கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை வழக்கு, வாகன விபத்து நஷ்ட ஈடு வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், உரிமையியல் சிவில் வழக்குகள், தொழிலாளா் வழக்குகள், வங்கி சம்பந்தப்பட்ட வழக்குகள் என காரைக்கால் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என 1145 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
மாவட்ட நீதிபதி கே .மோகன், ஓய்வு பெற்ற நீதிபதி கே.உத்திராபதி, சாா்பு நீதிபதி எஸ்.பழனி, சட்டப்பணிகள் ஆணை செயலா் கே.முனிராஜா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பி.சுபாஷினி, குற்றவியல் நடுவா் கே.அப்துல் கனி ஆகியோா் கொண்ட அமா்வுகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது.
காலை 10 முதல் மாலை 4 மணி வரை நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இதில் 796 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டு, பல்வேறு வழக்குகளின் மூலம் ரூ.6.09 கோடி வசூலிக்கப்பட்டது. வழக்குரைஞா் சங்கத் தலைவா் எஸ்.திருமுருகன் மற்றும் வழக்குரைஞா்கள் கலந்துகொண்டனா்.