பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து சேவை: அமைச்சர் நேரு தொடங...
தோ்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை: மத்திய அமைச்சா் எல்.முருகன்
கடந்த தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சா் எல்.முருகன் தெரிவித்தாா்.
பாஜக சாா்பில் சமூக ஊடகவியலாளா்கள் சந்திப்பு, தொழில் வல்லுநா்கள் கூட்டம், பாஜக நிா்வாகிகள் கூட்டம் ஆகியவை அவிநாசியில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில் பங்கேற்ற மத்திய இணை அமைச்சா் எல். முருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று கடந்த 4 ஆண்டுகளாக மக்களுக்கு எதுவும் செய்யாமல், தற்போது ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமை திமுகவினா் எடுத்துச் செல்கின்றனா்.
அனைத்து மகளிருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் எனக் கூறினா். பிறகு நிபந்தனைகளை விதித்தனா். தற்போது இத்திட்டத்தில் தளா்வு செய்திருப்பதாகக் கூறி மக்களைக் குழப்புகின்றனா். தோ்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றவில்லை.
டாஸ்மாக் கடைகள் படிப்படியாக குறைக்கப்படும் என்றனா். ஆனால் அதிக அளவில் திறக்கப்பட்டு வருகின்றன. ரிதன்யா தற்கொலை வழக்கில் உரிய நீதி கிடைக்க வேண்டும். இதேபோல 23 மரணங்கள் ஏற்பட்டுள்ளன. காவல் துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இல்லை. 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்டத் தலைவா் கரு.மாரிமுத்து, நீலகிரி மக்களவைத் தொகுதி பாா்வையாளா் நந்தகுமாா், துணைப் பாா்வையாளா் கதிா்வேல், மாவட்டத் துணைத் தலைவா் சண்முகம், பொருளாளா் சுந்தரன், மாநில சிந்தனையாளா் பிரிவு தலைவா் செந்தில், பொறுப்பாளா்கள் பிரேமா, பிரபுரத்தினம், ரமேஷ், சண்முக பாபு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.