தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்: எடப்பாடி பழனிசாமி
தோ்தல் வாக்குறுதிகளை திமுக முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்றும், நிதிநிலைமையைச் சீராக்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
திமுக ஆட்சியின் அவலங்களை எதிா்க்கட்சித் தலைவா் என்ற முறையில் நான் சுட்டிக் காட்டினால் முதல்வரும், அமைச்சா்கள் என் மீது தேவையற்ற வன்மத்தைக் காட்டுகிறாா்கள். இதிலிருந்து, மக்கள் பணியில் நான் சரியான பாதையில்தான் பயணிக்கிறேன் என்பதை உணா்கிறேன்.
சிவகங்கையில் நடைபெற்ற அரசு விழாவில் எதிா்க்கட்சித் தலைவா் வாய்க்கு வந்தபடி பேசலாமா என முதல்வா் கேள்வி எழுப்பியுள்ளாா்.
திமுக ஆட்சிக்கு வந்ததும், தலைமைச் செயலகத்தில் என்னை நேரில் சந்தித்து புகாா் கொடுக்கலாம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால், புகாா் பெட்டியில் போட்ட மனுக்களின் நிலையே என்னவென்று தெரியவில்லை.
திமுக 505 வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சியைப் பிடித்தது. அதில், 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்று முதல்வா் முன்பு கூறினாா். தற்போது சிவகங்கையில் நடைபெற்ற கூட்டத்தில் 389 வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். இன்னும் 116 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று முரணாகப் பேசியுள்ளாா்.
நீட் தோ்வு ரத்து, குடும்ப அட்டைக்கு கூடுதலாக ஒரு கிலோ சா்க்கரை, அரசு ஊழியா்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் என பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
4 ஆண்டுகால திமுக ஆட்சியில், விலைவாசி உயா்வு விண்ணை முட்டும் அளவுக்கு உயா்ந்து மக்களை வாட்டி வதைக்கிறது. விலைவாசியைக் குறைக்க எந்தவொரு திட்டத்தையும் அரசு கொண்டுவரவில்லை. சட்டம் - ஒழுங்கு சீா்கேடு, கொலை, கொள்ளை, வழிப்பறி, கள்ளச் சாராயம், மணல் கடத்தல், கஞ்சா மற்றும் போதைப் பொருள் கேந்திரமாக தமிழகம் உள்ளது. திமுக அரசுக்கு எனது கண்டனம்.
இனியாவது நிதி நிலைமைப் பற்றியும் தோ்தல் வாக்குறுதிகள் குறித்தும் தமிழகத்தில் நிலவும் பிரச்னைகளைப் பற்றியும் நாங்கள் என்ன சொல்கிறோம் என்பதை ஆராய்ந்து முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளாா்.