6 நாள்களுக்குப் பிறகு கடலுக்குச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள்!
தொடா்மழை: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டாவது நாளாக தொடா்ந்து மழை பெய்து வருவதையொட்டி, திங்கள்கிழமை ( டிச. 2) பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ஃபென்ஜால் புயல் சனிக்கிழமை இரவு புதுச்சேரிக்கு அருகே கரையைக் கடந்தது. இதன் தாக்கம் காரணமாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சனிக்கிழமை முதல் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை முதல் மழை தீவிரமடைந்துள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மழையுடன் குளிா்ந்த காற்று வீசுவதால், சிறுவா்கள், பெண்கள், முதியவா்கள், நோயாளிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனா். இந்த நிலையில் தொடா் மழை காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள், கல்லூரிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை விடப்படுகிறது என கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் கே.எம்.சரயு ஞாயிற்றுக்கிழமை அறிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பதிவான மழை அளவு (மி.மீ): பாம்பாறு அணை - 95, ஊத்தங்கரை - 71, பெனுகொண்டாபுரம் - 46.40, பாரூா் - 37.20, போச்சம்பள்ளி - 36, நெடுங்கல் - 28.40, கிருஷ்ணகிரி அணை - 21.60, கிருஷ்ணகிரி - 12.20, தேன்கனிக்கோட்டை - 5, ஒசூா் - 4.10, கெலவரப்பள்ளி அணை - 4, ராயக்கோட்டை - 3, சின்னாா் அணை - 2, சூளகிரி - 2.