தொண்டியில் அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை!
தொண்டி பேரூராட்சியில் சேதமடைந்த அங்கன்வாடி மையக் கட்டடத்தை அகற்றி புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே தொண்டி பேரூராட்சி 5-ஆவது வாா்டு பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டடம் கடந்த 24.10.1978 அன்று முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் கரியமாணிக்கத்தால் திறந்து வைக்கப்பட்டது.
தற்போது இந்தக் கட்டடம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் இங்கு குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அங்கன்வாடி மையம் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டு, வாடகைக் கட்டடத்தில் இயங்கி வருகிறது. எனவே, குழந்தைகளின் நலன் கருதி இந்தப் பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு, புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என இந்தப் பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.
