தொழிற்சாலையில் தீ விபத்து: தீயில் கருகி இளைஞா் சாவு
மானசரோவா் பூங்கா மெட்ரோ நிலையம் அருகே உள்ள தொழிற்சாலையில் வியாழக்கிழமை அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 25 வயது நபா் ஒருவா் உயிரிழந்ததாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
அந்தக் கட்டடத்தின் இரண்டாவது மாடியில் உள்ள சேமிப்பு அறையில் அஜீத் என்ற நபரின் உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது என்று தில்லி தீயணைப்புத் துறை தலைவா் அதுல் காா்க் தெரிவித்தாா்.
200 சதுர கெஜம் அடித்தளம் மற்றும் மூன்று தளங்களைக் கொண்ட கட்டடத்தில் அமைந்துள்ள காப்பா் லைட் மெட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சேமிப்பு அறையில் அதிகாலை 1.38 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இரண்டாவது மாடியில் 50 சதுர கெஜம் பரப்பளவில் உள்ள சேமிப்பு அறை, தீயணைப்பு வீரா்கள் வந்தபோது தீப்பிடித்து எரிந்ததாக காா்க் மேலும் கூறினாா்.
மொத்தம் ஐந்து தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. தீயணைப்பு வீரா்கள் துரிதமாகச் செயல்பட்டு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனா். தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
மேலும் விசாரணைக்காக பாதிக்கப்பட்டவரின் உடல் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது என்று அவா் தெரிவித்தாா்.