சத்துணவு மையங்களில் சமையல் உதவியாளா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்: மாநகராட்சி தகவல்
தொழிலாளர் நலத் துறைக்கு 11 முக்கிய அறிவிப்புகள்!
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று(ஏப். 9) குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள், தொழிலாளா் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத் துறைகளின் மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று வருகிறது.
அவற்றுக்கு அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சி.வெ.கணேசன் ஆகியோா் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், தொழிலார் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் சில முக்கிய அறிவிப்புகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
* திருக்குவளை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர்கள் தங்கி பயிலும் வண்ணம் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புதிய மாணவர் விடுதி கட்டடம் கட்டப்படும்.
* தமிழ்நாட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் மாணவர்கள் திறன் பயிற்சி பெறுவதற்கான சூழலை மேம்படுத்தும் பொருட்டு, 32 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் பழைய கட்டடங்களின் உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் 67 கோடியே 64 லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கப்படும்.
* தொலைதுரப் பகுதிகளிலிருந்து வந்து பயிலும் மாணவர்களின் வசதிக்காக, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களிலுள்ள 50 விடுதிகள் 22 கோடியே 98 லட்சம் ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்.
* கட்டுமானத் தொழிலாளர்கள் அவர்களது அன்றாடப் பணி தொடர்பாக அதிக அளவில் காலையில் கூடி காத்திருக்கும் இடங்களில், கட்டுமானத் தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், குடிநீர் மற்றும் இதர அடிப்படை வசதிகளுடன் கூடிய 50 வசதி மையங்கள் 20 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
* கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரிய உறுப்பினராக இருந்து 60 வயது பூர்த்தி அடைந்து, குடும்பத்தினரின் கவனிப்பும் பராமரிப்பும் இல்லாத, கட்டுமானத் தொழிலாளர்கள் தலா 50 நபர்கள் தங்கும் வகையில் உணவு மற்றும் உறைவிட வசதிகளுடன் சென்னையில் இரண்டு முதியோர் இல்லங்கள் தொடங்கப்படும்.
* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத தொழிலாளர்களுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் பணியிடத்து விபத்து மரண உதவித் தொகை 5 லட்சம் ரூபாயிலிருந்து 8 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகைகளோடு கூடுதலாக, செவிலியர் (Nursing) பட்டயப் படிப்பு பயில 3 ஆயிரம் ரூபாய், உணவு தயாரித்தல் மற்றும் சேவை (Catering and Services) பட்டயப் படிப்பு பயில 3 ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகை ஆண்டுதோறும் வழங்கப்படும்.
* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முறையான பட்டப்படிப்பு, முறையான பட்ட மேற்படிப்பு, தொழிற் கல்வி பட்டப்படிப்பு மற்றும் தொழிற் கல்வி பட்ட மேற்படிப்பு போன்ற உயர்கல்வி பயில தற்போது வழங்கப்பட்டு வரும் கல்வி உதவித் தொகை கூடுதலாக ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும்.
* பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு முனைவர் பட்டப்படிப்பு (Ph.D) பயிலும் நேர்வில் ஒரு கல்வி ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வீதம் மூன்று ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
* பெண்கள் தன்னிம்பிக்கையோடு ஆட்டோ ஓட்டும் சுயதொழில் செய்து வாழ்க்கையில் முன்னேற்வதை ஊக்குவிப்பதற்காக, தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண் / திருநங்கை ஓட்டுநர்கள் சொந்தமாக புதிய ஆட்டோ வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா ஒரு லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.
* தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த, கட்டுமான வேலை, கம்பி வளைப்பு வேலை, தச்சு வேலை, மின்பணியாளர் வேலை, பிளம்பர், வெல்டர், வர்ணம் பூசுதல், ஏசி மெக்கானிக், கண்ணாடி அறுத்தல், சலவைக்கல் ஒட்டுதல் உள்ளிட்ட பல தொழில் இனங்களில் எழு நாள்கள் திறன் மேம்பாட்டு பயிற்சி, நாள் ஒன்றுக்கு 800 ரூபாய் ஊதியத்துடன், 50,000 தொழிலாளர்களுக்கு ரூபாய் 45 கோடியே 21 லட்சம் செலவில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை! இன்று இது இரண்டாவது முறை!!