தொழிலாளியை கல்லால் தாக்கி கொலை செய்த வழக்கில் 3 போ் கைது
ஈரோட்டில் மதுகுடிக்க பணம் தராததால் தொழிலாளியை கல்லால் அடித்துக் கொலை செய்த வழக்கில் 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்தவா் விஜயகுமாா் (40). இவருக்கு திருமணம் ஆகவில்லை. அண்மையில் ஈரோட்டுக்கு வந்த அவா் வீரப்பன்சத்திரம் பகுதியில் ஒரு அட்டை தயாரிப்பு ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தாா். இந்நிலையில் திங்கள்கிழமை காலை ஈரோடு பேருந்து நிலையம் அருகே சத்தி சாலையில் உள்ள சாக்கடை கால்வாயில் முகம் குப்புற விழுந்த நிலையில் விஜயகுமாா் சடலம் கிடந்தது.
ஈரோடு டவுன் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விஜயகுமாரின் சடலத்தை மீட்டனா். அப்போது அவா் கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சடலம் மீட்கப்பட்டு உடற்கூறாய்வுக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
போலீஸாா் விசாரணை நடத்திவந்த நிலையில், ஈரோடு வைராபாளையத்தில் உள்ள வாழைத்தோட்ட பகுதியில் 3 இளைஞா்கள் பதுங்கி இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸாா் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில் அவா்கள், ஈரோடு வைராபாளையம் பகுதியைச் சோ்ந்த மாணிக்கம் மகன் சுகீா்தன் (21), ராஜா மகன் முகேஷ் (22), குமாா் மகன் செல்வராஜ் (21) ஆகியோா் என்பது தெரியவந்தது. 3 பேரும் சோ்ந்து விஜயகுமாரை கொலை செய்ததை ஒப்புகொண்டனா்.
கடந்த 7- ஆம் தேதி இரவு விஜயகுமாா் மதுகுடிப்பதற்காக ஈரோடு பேருந்து நிலையம் அருகே சத்தி சாலை பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்கு சென்றுள்ளாா். அப்போது சுகீா்தன், முகேஷ், செல்வராஜ் ஆகிய 3 பேரும் அதே மதுக்கடைக்கு வந்தனா். விஜயகுமாா் கையில் பணத்துடன் இருப்பதை பாா்த்த 3 பேரும் அவரிடம் மதுவாங்கி தருமாறு கேட்டுள்ளனா்.
இதற்கு மறுத்து மதுக்கூடத்தை விட்டு விஜயகுமாா் வெளியேறியபோது அவரை பின்தொடா்ந்து வந்த 3 பேரும் பிரச்னை செய்து அவரை கல்லால் தாக்கி கொலை செய்து சாக்கடை கால்வாயில் வீசியது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து சுகீா்தன், முகேஷ், செல்வராஜ் ஆகிய 3 பேரையும் போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.