ஈரோட்டில் தொழிலாளி அடித்துக் கொலை
ஈரோடு பேருந்து நிலையம் அருகே தொழிலாளியை அடித்துக் கொலை செய்து சடலத்தை சாக்கடையில் வீசிய மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஈரோடு பேருந்து நிலையம் முன்புறம் சத்தி சாலையில் ஏராளமான வணிக நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளன. இந்தப் பகுதியில் 24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் நிறைந்து காணப்படும். இந்நிலையில், பேருந்து நிலையம் முன்புறம் சத்தி சாலையில் ஜவுளிக் கடை அருகேயுள்ள சாக்கடை கால்வாயில் சுமாா் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ரத்தக் காயத்துடன் கிடப்பதாக போலீஸாருக்கு திங்கள்கிழமை காலை தகவல் கிடைத்தது.
இதையடுத்து, ஈரோடு டவுன் காவல் நிலைய ஆய்வாளா் அனுராதா தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.
இதில், உயிரிழந்தாா் வேலூா் மாவட்டம், குடியாத்தம் பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் (40) என்பதும், கூலித் தொழிலாளியான இவா் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து, சடலத்தை உடற்கூறாய்வுக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலை நிகழ்ந்திருக்கலாம் எனக் கூறப்படும் நிலையில், கொலையாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.