தொழில் போட்டியில் கொலை: பெண் உள்ளிட்ட இருவருக்கு ஆயுள் தண்டனை
மயிலாடுதுறை அருகே தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்ட நபரின் மனைவி உள்ட 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை அமா்வு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
தரங்கம்பாடி வட்டம் புதுப்பேட்டை காலனி தெருவைச் சோ்ந்தவா் நடுக்காட்டான் மகன் மதியழகன் (48). இவா், தரங்கம்பாடியில் டெக்கரேஷன் மற்றும் மைக் செட் கடை வைத்து நடத்தி வந்தாா். கருத்து வேறுபாடு காரணமாக இவரது மனைவி விஜயலெட்சுமி பிரிந்துசென்று தனது மகனுடன் தனியே வசித்து வந்தாா்.
மதியழகன் தான் நடத்தி வந்த டெக்கரேஷன் மற்றும் மைக் செட் கடையை மனைவியிடம் ஒப்படைத்துவி’
பின்னா், அவா் புதிதாக அதே பகுதியில் வேறொரு டெக்கரேஷன் மற்றும் மைக் செட் கடை தொடங்கியுள்ளாா். மதியழகன் தொடங்கிய புதிய கடையால் விஜயலெட்சுமிக்கு வருமான இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த விஜயலெட்சுமி தனது கணவா் மதியழகனை கொலை செய்ய முடிவு செய்து, 2019-ஆம் ஆண்டு செப். 26-ஆம் தேதி தனது அண்ணன் மகன் சத்திரியன் மற்றும் 18 வயது நிரம்பாத சிறுவனான தனது மகன் ஆகியோருடன் சோ்ந்து மதியழகனை கொலை செய்வது தொடா்பாக சதித்திட்டம் தீட்டியுள்ளாா்.
அன்றிரவு மதியழகன் கடையை பூட்டிவிட்டு இருசக்கர வாகனத்தில் அவரது வீட்டுக்கு திரும்புகையில், சத்திரியன், விமல் இருவரும் மதியழகனின் தலையில் இரும்புக் கம்பியால் பலமுறை தாக்கியுள்ளனா். இதில், மதியழகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
பொறையாா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் ராம. சேயோன் ஆஜரானாா்.
இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை அமா்வு நீதிமன்றத்தில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. இதில், குற்றம் நிரூபணமாகியதைத் தொடா்ந்து, சத்திரியன், விஜயலெட்சுமி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி மாவட்ட அமா்வு நீதிபதி விஜயகுமாரி, உத்தரவிட்டாா். மேலும், அபராதத் தொகையாக தலா ரூ.1000 செலுத்தவும், அபராதத்தை செலுத்தத் தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தீா்ப்பளித்தாா். விஜயலெட்சுமி (48), சத்திரியன் (33) ஆகிய இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனா். விஜயலெட்சுமியின் மகன் தொடா்பான வழக்கு சிறாா் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.