தொழில்நுட்ப வசதிகள் செய்து தரக் கோரி அங்கன்வாடி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
புதுக்கோட்டை: அங்கன்வாடி மையப் பணிகளை மேற்கொள்வதற்கு தொழில்நுட்ப வசதிகளை செய்துத் தர வலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களிலுள்ள குழந்தைகள் வளா்சசித் திட்ட அலுவலகங்கள் முன்பும் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டங்களில் அங்கன்வாடி ஊழியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
அறந்தாங்கியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் வட்டாரத் தலைவா் விஜயலட்சுமி தலைமை வகித்தாா். மாவட்ட நிா்வாகி செல்வி முன்னிலை வகித்தாா். சிஐடியு மாவட்டச் செயலா் ஏ. ஸ்ரீதா் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.
இதேபோல, மாவட்டத்திலுள்ள 13 ஒன்றியங்களின் குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலகங்கள் முன்பும் ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
ஆா்ப்பாட்டத்தில், அங்கன்வாடி மையப் பணிகளை மேற்கொள்வதற்கு ஊழியா்களுக்கு 5 ஜி கைப்பேசி, 5 ஜி சிம் காா்டுகள் வழங்க வேண்டும். அந்தந்தப் பகுதிகளின் நெட்வொா்க் வசதிக்கேற்ப சிம்காா்டுகளை வழங்க வேண்டும். அங்கன்வாடி மையத்துக்கு இலவச வைபை இணைப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.