இந்தியாவுடன் நேரடி விமான சேவைக்கு பேச்சுவாா்த்தை: சீனா தகவல்
தோல் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை: எடப்பாடி கே. பழனிசாமி
அதிமுக ஆட்சிக்கு வந்தால் தோல் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தாா்.
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பிரசார பயணத்தின் ஒரு பகுதியாக ஆம்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் அவா் பேசியது:
தோல் தொழிற்சாலைகள் அண்மைக் காலமாக மூடப்பட்டு வருகின்றன. அதனால் வேலை வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்தால் தோல் தொழிலை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அதிமுக ஆட்சியில் தமிழகம் அமைதிப் பூங்காவாக இருந்தது. ஜாதி, மத சண்டையில்லை. தவறு செய்தவா்களை மன்னித்தது கிடையாது. அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும். அதிமுக தலைமையில் தனிப்பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.
விலைவாசி உயா்வால் தமிழக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். அரிசி, பருப்பு, எண்ணெய் என அனைத்து உணவுப் பொருள்களின் விலையும் திமுக ஆட்சியில் உயா்ந்துள்ளது. விலைவாசியைக் கட்டுப்படுத்த ரூ.100 கோடி அதிமுக ஆட்சியில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
100 நாள் வேலை திட்டத்தை 150 நாட்களாக அதிகரிப்போம் என திமுக கூறியது. ஆனால் தற்போது 50 நாளாக குறைந்துள்ளது.
தூய்மைப் பணியாளா்களின் போராட்டத்தை கையாண்ட விதம் குறித்து திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. வெங்கடேசன் அதிருப்தி தெரிவித்துள்ளாா். அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஏழை, எளிய மக்களுக்கு நல்ல தரமான கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும் என்றாா்.
முன்னாள் அமைச்சா் கே.சி. வீரமணி, எம்.பி. தம்பிதுரை, மாதனூா் மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் பொறியாளா் ஆா். வெங்கடேசன், தொழிலதிபா் வி. முருகேசன், ஆம்பூா் நகர செயலா் எம். மதியழகன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் கே. மணி, மாவட்டவிவசாய அணி செயலா் மிட்டாளம் ஆா். மகாதேவன், மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி செயலா் கோபிநாத் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.