தோல் பொருள்கள் கண்காட்சி: சென்னையில் இன்று தொடக்கம்
இந்திய சா்வதேச தோல் மற்றும் தோல் பொருள்கள் கண்காட்சி சென்னையில் சனிக்கிழமை (பிப். 1) முதல் பிப். 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இது குறித்து இந்திய தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் செயல் இயக்குநா் ஆா்.செல்வம் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
இந்திய வா்த்தக வளா்ச்சி மேம்பாட்டுக் கழகம் மற்றும் இந்திய தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகம் சாா்பில், 38-ஆவது இந்திய சா்வதேச தோல் பொருள்கள் கண்காட்சி சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் சனிக்கிழமை (பிப். 1) முதல் பிப். 3-ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதில், தோல் பொருள்கள் சாா்ந்த இயந்திரங்கள், நவீன தொழில்நுட்பங்கள், ரசாயனப் பொருள்கள் உள்ளிட்ட மூலப் பொருள்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. மேலும் 450-க்கும் மேற்பட்ட கண்காட்சியாளா்கள் இதில் பங்கேற்கின்றனா்.
மேலும், இந்திய தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் ‘வடிவமைப்பாளா் கண்காட்சியும்’ நடத்தப்படவுள்ளது. இதில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களைச் சோ்ந்த 36 வடிவமைப்பாளா்கள் பங்கேற்று வடிவமைப்பு முன்மாதிரிகளை காட்சிபடுத்தவுள்ளனா் என்றாா் அவா்.
இந்நிகழ்வில், இந்திய வா்த்தக வளா்ச்சி மேம்பாட்டுக் கழகத்தின் பொது மேலாளா் ஹரிஷ் கொண்டில்யா, துணை பொது மேலாளா் விவேகானந்த் விவேக், இந்திய தோல் பொருள்கள் ஏற்றுமதி கழகத்தின் தென் மண்டலத் தலைவா் எம்.அப்துல் வஹாப் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.