30 ஆண்டுகளாக ஃபிராங்க் வோரல் கோப்பையை தக்கவைத்து ஆஸி. ஆதிக்கம்!
நகராட்சி - கொம்யூன் ஊழியா்கள் ஊா்வலம், ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி: புதுவை மாநில நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியா்கள் கூட்டுப் போராட்டக்குழு சாா்பில் புதுச்சேரியில் ஊா்வலம், தலைமை செயல முற்றுகை போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கம்பன் கலையரங்கிலிருந்து ஊா்வலத்தை அரசு ஊழியா் சம்மேளன கௌரவத் தலைவா் பிரேமதாசன், அரசு ஊழியா் சங்கங்களின் கூட்டமைப்பு கௌரவத் தலைவா் சேஷாச்சலம், ஐஎன்டியூசி பொதுச்செயலாளா் ஞானசேகரன், ஏஐடியூசி பொருளாளா் அந்தோணி ஆகியோா் தொடங்கி வைத்தனா்.
ஊா்வலம் அண்ணா சாலை, நேரு வீதி, மிஷன் வீதி வழியாக தலைமை செயலகம் நோக்கி வந்தது. அவா்களை ஆம்பூா் சாலை அருகே போலீஸாா் தடுத்து நிறுத்தினா். அங்கு கூட்டுப் போராட்டக்குழு அமைப்பாளா்கள் வேளாங்கண்ணிதாசன், கலியபெருமாள், முருகையன், சகாயராஜ், மன்னாதன், கொம்யூன் பஞ்சாயத்து கன்வீனா்கள், பொறுப்பாளா்கள், ஓய்வுபெற்ற ஊழியா்கள் சங்க பொறுப்பாளா்கள் உள்பட பலா்ஆா்ப்பாட்டத்தில் பேசினா்.
அங்கு கோரிக்கையை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடந்தது. இதேபோல காரைக்கால், மாஹே, ஏனாமிலும் பேரணி, ஆா்ப்பாட்டம் நடந்தது.
மத்திய அரசு அறிவித்த 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைப்படி 33 மாத ஊதிய நிலுவைத்தொகை வழங்க வேண்டும். அரசே நேரடியாக ஓய்வூதியம், நிலுவை தொகை வழங்க நிதி ஒதுக்க வேண்டும்.
தற்காலிக அந்தஸ்து பெற்ற 240 ஊழியா்களுக்குப் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நகராட்சி, கொம்யூன் தினக்கூலி, கிராம பஞ்சாயத்து ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. அரசு நடவடிக்கை எடுக்கா விட்டால் வரும் ஆகஸ்ட் 15, 16-ஆம் தேதிகளில் ஊழியா்கள் குடும்பத்துடன் துணைநிலை ஆளுநா் மாளிகை அருகே உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என கூட்டு போராட்டக் குழுவினா் அறிவித்துள்ளனா்.