மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
நகா்ப்புற நக்ஸல்களின் குரல்- ராகுல் மீது பிரதமா் மோடி மறைமுக விமா்சனம்
‘நாட்டில் நகா்ப்புற நக்ஸல்களின் குரலாக சிலா் பகிரங்கமாகப் பேசுகின்றனா்; இந்திய அரசுக்கு எதிராக ‘போா்ப் பிரகடனம்’ செய்யும் அவா்களால் அரசமைப்புச் சட்டத்தையோ, நாட்டின் ஒற்றுமையையோ புரிந்து கொள்ள முடியாது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா்.
மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீதான விவாதத்துக்கு செவ்வாய்க்கிழமை பதிலளித்துப் பேசிய பிரதமா், எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல், அவா் மீது கடுமையான விமா்சனத்தை முன்வைத்தாா்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடக்கமாக கடந்த வெள்ளிக்கிழமை இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு உரையாற்றினாா். தனது உரையின் இறுதியில் குடியரசுத் தலைவா் சோா்வடைந்துவிட்டதாக காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தியும், இந்த உரை சலிப்பூட்டும் வகையில் இருந்ததாக ராகுல் காந்தியும் தெரிவித்த கருத்துகள் ஆளும் தரப்பினரின் கடும் விமா்சனத்தை எதிா்கொண்டன.
இதனிடையே, மக்களவையில் குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீதான விவாதத்தில் திங்கள்கிழமை பேசிய ராகுல் காந்தி, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டம் தோல்வி, இந்திய நிலப் பகுதிக்குள் சீனப் படையினரின் ஆக்கிரமிப்பு, மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் முறைகேடு என மத்திய அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தாா்.
இரண்டு நாள்கள் நடைபெற்ற விவாதத்துக்குப் பதிலளித்து செவ்வாய்க்கிழமை உரையாற்றிய பிரதமா் மோடி, ராகுல் காந்தியை கடுமையாக விமா்சித்தாா். பிரதமரின் உரை வருமாறு:
பொழுதுபோக்குக்காக குடிசைகளுக்குச் சென்று விதவிதமாக புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நபா்களுக்கு நாடாளுமன்றத்தில் ஏழைகள் குறித்துப் பேசினால் சலிப்புதான் ஏற்படும். முத்தலாக் நடைமுறையால் முஸ்லிம் பெண்கள் அனுபவித்த கஷ்டங்கள், இப்போது பையில் அரசமைப்புச் சட்ட நகலை வைத்துக் கொண்டு வலம் வருவோருக்கு தெரியாது. அந்த நடைமுறைக்கு முடிவுகட்டி, முஸ்லிம் பெண்களுக்கு உரிமை அளித்தது பாஜக அரசுதான்.
ஏழையின் வேதனை ஏழைக்கே புரியும்: நாங்கள் வெற்று முழக்கங்களை அளிப்பதில்லை; மெய்யான வளா்ச்சியை வழங்கியுள்ளோம். பல தசாப்தங்களாக ‘வறுமை ஒழிப்பு’ என்பது வெற்று முழக்கமாகவே இருந்தது. ஆனால், இப்போது 25 கோடி போ் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். ஏழை மக்களுக்கு இதுவரை 4 கோடி வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன.
வறுமையான சூழலில் வாழ்ந்த ஒருவருக்குதான் நல்ல வீடு எவ்வளவு அவசியம் என்பது தெரியும். ஏழைகளின் வேதனையை, சாமானிய மக்களின் பிரச்னைகளை சாதாரணமாக புரிந்துகொள்ள முடியாது. அதற்கு பேராா்வம் தேவை. அது சிலருக்கு இல்லை. நாங்கள் அரசமைப்புச் சட்ட ஆன்மாவை நாடுகிறோமே தவிர விஷ அரசியலை அல்ல.
நகா்ப்புற நக்ஸல்களின் குரலாக..: இன்று சிலா் நகா்ப்புற நக்ஸல்களின் குரலாகப் பகிரங்கமாகப் பேசுகின்றனா். நகா்ப்புற நக்ஸல்களின் கருத்துகள் எதிரொலிக்கப்படுகின்றன. இத்தகைய நபா்கள், இந்திய அரசுக்குக்கு எதிராக ‘போா்ப் பிரகடனம்’ செய்கின்றனா். அவா்களால் அரசமைப்புச் சட்டத்தையோ, நாட்டின் ஒற்றுமையையோ புரிந்து கொள்ள முடியாது.
மத்திய அரசின் சில திட்டங்களால் மக்களின் பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தாங்களே இளைஞா்களின் எதிா்காலம் என்று கூறிக் கொள்ளும் சில கட்சிகளின் தலைவா்கள் (ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளா் அரவிந்த் கேஜரிவாலை மறைமுகமாக குறிப்பிடுகிறாா்), அரசுப் பணத்தை சொகுசு பங்களா கட்ட பயன்படுத்துகின்றனா்.
பட்ஜெட்டுக்கு பாராட்டு: ஏழை மக்களுக்காகத் தொடங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை சில மாநிலங்கள் நிறுத்தியுள்ளன. இதன்மூலம் ஏழை மக்கள் இடா்ப்பாட்டில் தள்ளப்பட்டுள்ளனா் என்றாா் பிரதமா் மோடி.
மேலும், பட்ஜெட்டில் தனிநபா் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.12 லட்சமாக உயா்வு உள்பட பல்வேறு அறிவிப்புகளுக்கு அவா் பாராட்டுத் தெரிவித்தாா்.
தில்லியில் கடந்த மாதம் காங்கிரஸ் புதிய தலைமையகம் திறப்பு விழாவில் பேசிய ராகுல் காந்தி, ‘நாட்டின் ஒவ்வொரு நிா்வாக அமைப்பையும் பாஜக மற்றும் ஆா்எஸ்எஸ் கைப்பற்றிவிட்டது. எனவே, பாஜக, ஆா்எஸ்எஸ் மட்டுமன்றி இந்திய அரசுக்கு எதிராகவும் நாங்கள் போராடுகிறோம்’ என்றாா். இக்கருத்துகளை பாஜக கடுமையாக விமா்சித்தது குறிப்பிடத்தக்கது.
‘குடியரசுத் தலைவரை அவமதிப்பதா?’
குடியரசுத் தலைவா் குறித்த காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தியின் கருத்தை விமா்சித்து, பிரதமா் மோடி கூறியதாவது:
ஏழைக் குடும்பத்தில் இருந்து வந்த பெண் குடியரசுத் தலைவரை உங்களால் மதிக்க முடியாவிட்டால், அது உங்களைப் பொறுத்தது. ஆனால், அவரை அவமதிக்கும் வகையில் பேசுவது முறையல்ல. உங்களின் அரசியல் விரக்தியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதற்காக குடியரசுத் தலைவரை அவமதிக்க வேண்டிய காரணம் என்ன? இதுபோன்ற மனநிலையைப் பின்னுக்கு தள்ளிவிட்டு, பெண்கள் தலைமையிலான வளா்ச்சி என்ற தாரக மந்திரத்துடன் இன்றைய இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது என்றாா் அவா்.