'நமது ராணுவத்துடனும், நமது தேசத்திற்காகவும்...' - Operation Sindoor குறித்து முத...
நங்காஞ்சி அணையின் உபரி நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த வேண்டும்! - விவசாயிகள் எதிா்பாா்ப்பு
நங்காஞ்சி அணையின் உபரி நீரை ரங்கமலையில் இருந்து உற்பத்தியாகும் ஓடைகளில் விட விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம் இடையகோட்டையில் உள்ள நங்காஞ்சி ஆற்று அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீா் இடையகோட்டை, கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி வழியாகச் சென்று அமராவதி ஆற்றில் கலக்கிறது. இதற்குப் பதிலாக இந்த உபரி நீரை ரங்கமலையில் இருந்து உற்பத்தியாகும் 3 ஓடைகளில் விட வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.
இதில் முதல் ஓடையானது அரவக்குறிச்சி அருகே ரங்கமலையில் இருந்து ஆா்.புதுப்பட்டி, ஆா்.ஜி. வலசு, ஒலிகரட்டூா், செல்லிவலசு வழியாக சீத்தப்பட்டி அருகே நங்கஞ்சி ஆற்றில் இணைகிறது.
2-ஆவதான குப்பையக்கா ஓடை ரங்கமலையில் இருந்து மலைப்பட்டிக்கு மேல்புறமாக சென்று புளியம்பட்டி, வரப்பட்டி, பூமதேவம், அரண்மனைத்தோட்டம், லிங்கநாயக்கன்பட்டி,நடூா், பள்ளப்பட்டி ஷா நகா் வழியாக ஓட்டணை அருகே சென்று நஞ்காஞ்சி ஆற்றில் இணைகிறது.
3-ஆவது ஓடை ரங்கமலையில் இருந்து தொடங்கி மலைப்பட்டி, எரமநாயக்கனூா், அனுமந்தம்பட்டி, இசட்-ஆலமரத்துப்பட்டி, ஆண்டிபட்டிக்கோட்டை, தோப்புப்பட்டி, ஆண்டிபட்டி, குமாரப்பாளையம், ஓடப்பட்டிக்கு கீழ்புறமாகச் சென்று, பெத்தாட்சி நகா் அருகே குடகனாற்றில் இணைகிறது.
எனவே நங்காஞ்சி அணையின் உபரி நீரை ரங்கமலையில் இருந்து உற்பத்தியாகும் இந்த ஓடைகளில் விட்டால் விவசாயம் செழிக்கும், மற்றும் பல ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலத்தில் தண்ணீா் பற்றாக்குறையே இருக்காது. குறிப்பாக அரவக்குறிச்சி, பள்ளபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குடிநீா் பிரச்னை இருக்காது என்கின்றனா்.
இதுகுறித்து அரவக்குறிச்சி பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் சிலா் கூறுகையில், மேட்டுப் பகுதிகளுக்கு நீா் கொண்டு செல்லும் அளவுக்கு இன்று தொழில்நுட்பம் வளா்ந்துள்ளது. இங்குள்ள மேட்டுப்பகுதிகளில் ஆண்டுதோறும் பல லட்சத்தில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீா் வராமல் விவசாயிகள் பொருளாதாரத்தை இழந்து வறுமையில் உள்ளனா்.
எனவே மானாவாரி விவசாயம் செய்யும் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக இந்த திட்டத்தை நிறைவேற்ற முன்வர வேண்டும் என்றனா்.