மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினா் ஆா்ப்பாட்டம்
நடப்பு நிதியாண்டில் 1.38 லட்சம் புதிய நிறுவனங்கள் பதிவு: அரசு புள்ளி விவரம்
நிகழ் நிதியாண்டில் ஜனவரி 26-ஆம் தேதி வரையிலான நிலவரப்படி நாடு முழுவதும் 17,654 நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதும், புதிதாக 1,38,027 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதும் அரசு புள்ளிவிவரம் மூலம் தெரியவந்துள்ளது.
மேலும், நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 339 வெளிநாட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
மாநிலங்களவையில் இதுதொடா்பாக ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் உறுப்பினா் பரிமள் நத்வானி எழுப்பிய கேள்விக்கு மத்திய நிறுவனங்கள் விவகாரத் துறை இணையமைச்சா் ஹா்ஷ் மல்ஹோத்ரா எழுத்துபூா்வமாக அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:
அதிகாரபூா்வ பதிவுகளின்படி நிகழ் நிதியாண்டில் நாடு முழுவதும் 17,654 நிறுவனங்கள் மூடப்பட்டிருக்கின்றன. நிறுவனங்கள் ஒன்றிணைப்பு, பிற நிறுவனங்களுடன் கூட்டுறவு அல்லது முழுமையாக மூடப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் இந்த நிறுவனங்கள் மூடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 22,044 நிறுவனங்கள் மூடப்பட்டன. 2022-23-ஆம் நிதியாண்டில் 84,801 நிறுவனங்கள் மூடப்பட்டன.
அதே நேரம், நாடு முழுவதும் 1,38,027 புதிய நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இது கடந்த ஆண்டில் 1,85,3178-ஆகவும், 2022-23-ஆம் நிதியாண்டில் 1,59,302-ஆகவும் இருந்தது.
நாட்டில் தொழில் தொடங்குவதை எளிதாக மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பட்டியலிடப்பட்டிருந்த 63 வகையான குற்றங்களை மத்திய அரசு குற்றமற்ாக மாற்றியுள்ளது என்றாா்.
நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் 339 வெளிநாட்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இதில் நிகழாண்டில் மட்டும் தமிழகத்தில் 2 வெளிநாட்டு நிறுவனங்களும், கேரளம், ஆந்திரம், தில்லியில் தலா ஒன்று என மொத்தம் 5 வெளிநாட்டு நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன.
அதே நேரம், வெளிநாட்டு நிறுவனங்கள் நாட்டில் பதிவு செய்வது கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் குறைந்து வருகிறது. 2020-இல் நாட்டில் 90 வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் பதிவு செய்து தொழில் தொடங்கின. இது 2021-இல் 75-ஆகவும், 2022-இல் 64, 2023-இல் 57, 2024-இல் 53 என படிப்படியாக குறைந்துள்ளன என்றாா்.