நரிக்குடி: சத்துணவு சாப்பிட்ட 14 மாணவர்களுக்கு வாந்தி; வயிற்று வலி... சமையலர் பணியிடை நீக்கம்!
நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், புல்வாய்க்கரையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 70-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளியின் சத்துணவு மையத்தில் நேற்று மதியம் முட்டையுடன் சத்துணவு சமைத்து வழங்கப்பட்டது. இந்தநிலையில், பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட மாணவர்களில் 14 பேருக்கு திடீர் வாந்தியும், கடுமையான வயிற்று வலியும் ஏற்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் நரிக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-07/tv4pgh20/IMG20220930145521.jpg)
இந்த விவகாரம் பரபரப்பான நிலையில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், சத்துணவு அமைப்பாளர் மற்றும் சமையலர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். இந்தநிலையில், சத்துணவு மையத்தினை சுகாதாரமாக வைக்காதது, தரமற்ற மதிய உணவு தயார் செய்யப்பட்டது ஆகியவற்றின் அடிப்படையில் புல்வாய்க்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியின் சமையல் உதவியாளர் கருப்பாயி என்பவரை விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன், அறிவுரையின்படி தற்காலிக பணிநீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.