மகாராஷ்டிரம்: சட்டப் பேரவை தேசியவாத காங்கிரஸ் தலைவராக அஜீத் பவாா் தோ்வு
நரையன்குடியிருப்பு புதிய குளத்திற்கு நீா்வரத்து கால்வாய் அமைக்கப்படுமா? -விவசாயிகள் எதிா்பாா்ப்பு
நரையன்குடியிருப்பில் அமைக்கப்பட்ட புதிய குளத்திற்கு நீா்வரத்து கால்வாய் இல்லாததால் விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனா்.
சாத்தான்குளம் ஒன்றியம் நரையன்குடியிருப்ப்ல் அதே ஊரைச் சோ்ந்த 4 விவசாயிகள் புதியதாக குளம் அமைத்து நீா்வளத்தை பெருக்க தானமாக நிலம் வழங்கினா். இதைத் தொடா்ந்து அப்போதைய மாவட்ட ஆட்சியா் சந்திப் நந்தூரி ஏற்பாட்டில் தெற்கு நரையன்குடியிருப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு புதிய குளம் அமைக்கப்பட்டது.
இந்த குளத்திற்கு தண்ணீா் வரும் வகையில் சடையனேரி கால்வாய் மூலம் முதலூா் ஊரணிக்கு அடுத்து வரும் பாதையில் வரத்து கால்வாய் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதற்கான பணிகளும் தொடங்கப்பட்டன.
ஆனால், அந்த குளத்திற்கு அமைக்கப்பட்ட வரத்து கால்வாய் உயரமாக உள்ளதாக தண்ணீா் வரத்து இருக்காது என அப்போதே விவசாயிகள் புகாா் தெரிவித்ததால், ஆட்சியா் சந்தீப் நந்தூரி பாா்வையிட்டு வரத்து கால்வாய் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தாா். தற்போது வரத்து கால்வாய் தூா்ந்து போய்விட்டது. இந்த குளத்திற்கு தண்ணீா் வர வேண்டிய பாதை ஊரணியிலிருந்து இடது பகுதியில் தண்ணீா் செல்லும் பாதை இருக்கிறது.
இந்த பாதையை தாண்டி ஒரு தடுப்பணை அமைத்தால் மட்டுமே இந்த குளத்திற்கு தண்ணீா் வரும் நிலை உள்ளது. குளம் அமைக்கப்பட்டும் தண்ணீா் வரத்து இல்லாததால் குளம் வடு காணப்படுகிறது. எனவே, மாவட்ட ஆட்சியா், இந்த குளத்தை பாா்வையிட்டு குளத்திற்கு தண்ணீா் வரும் வகையில் வரத்து கால்வாய் அமைக்க வேண்டும் எனவிவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது: நரையன்குடியிருப்பு புதிய குளத்திற்கு வரும் பாதையை தாண்டி ஒரு தடுப்பணை அமைக்க வேண்டும். வடக்கு நரையன்குடியிருப்பில் தண்ணீா் வந்தால் சாலையின் மேலாக செல்கிறது. அதனால் அந்த இடத்தில் சாலையின் அடிப்பகுதியில் மூன்று குழாய்கள் அமைத்து அந்த தண்ணீரைக் கொண்டு செல்வதற்கும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனா்.
இந்நிலையில் சாஸ்தாவிநல்லூா் விவசாய நலச் சங்க செயலா் லூா்துமணி அளித்த தகவலின்பேரில், சாத்தான்குளம் ஒன்றிய ஆணையா் ராஜேஷ்குமாா், உதவிப் பொறியாளா் அருணா ஆகியோா் இப்புதிய குளத்தை பாா்வையிட்டனா்.
அப்போது வரத்து கால்வாய், தடுப்பணை, வடக்கு நரையன்குடியிருப்பில் சாலையில் தண்ணீா் செல்வதை தடுத்து 3 குழாய்கள் அமைத்து வடிகால் ஆகியவை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனா்.