மீன் பதப்படுத்தும் ஆலைகளை மூடக் கோரி பொட்டலூரணி கிராம மக்கள் ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமம் அருகேயுள்ள மீன் பதப்படுத்தும் ஆலைகளை மூட வலியுறுத்தி, தூத்துக்குடி சிதம்பரநகா் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்தக் கிராமத்தைச் சுற்றி 3 தனியாா் மீன் பதப்படுத்தும் ஆலைகள் உள்ளன. இவற்றிலிருந்து வெளியேறும் கழிவுகள் பொட்டலூரணி, சுற்றுப்புறப் பகுதிகளில் உள்ள வயல்வெளிகளுக்குச் செல்வதால், நிலத்தின் தன்மை பாதிக்கப்பட்டு விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் இந்நிறுவனங்களிலிருந்து வெளியாகும் துா்நாற்றத்தால் மக்கள் பல்வேறு நோய் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் கூறப்படுகிறது.
எனவே, இந்த ஆலைகளை மூட வலியுறுத்தி ஓராண்டுக்கு மேலாக கிராம மக்கள் போராடி வருகின்றனா்; கடந்த மக்களவைத் தோ்தலைப் புறக்கணித்தனா். எனினும், மாவட்ட நிா்வாகம் ஆலைகளை மூடாமல், போராட்டம் நடத்தியோா் மீது வழக்குப் பதிந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கிராம மக்கள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், இந்த ஆலைகளை மூட வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஜனநாயக அமைப்பினா் பங்கேற்றனா்.