அறிமுகப் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள்! யார் இந்த அஸ்வனி குமார்?
நாகையில் உயா்கோபுர மின்விளக்குகளின் பயன்பாடு தொடங்கிவைப்பு
நாகையில் உயா் கோபுர மின்விளக்குகளின் பயன்பாட்டை, பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நாகை நகராட்சிக்குட்பட்ட புதிய கடற்கரைக்கு செல்லும் பாதைகளான எஸ்.பி. பங்களா சாலை, ஏடிஜெ பாலிடெக்னிக் சாலை மற்றும் புதிய கடற்கரை செல்லும் சாலை ஆகியவற்றில் உள்ள தெரு விளக்குகளில் ஒளித்திறன் மிகவும் குறைவாக இருந்தது. இதையடுத்து, நாகை மாவட்ட ஆட்சியா் ரூ. 26 லட்சம் நிதி ஒதுக்கீட்டில், மேற்காணும் சாலைகளில் உள்ள மின்கம்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு 20 வாட்ஸ் எல்இடி விளக்குகளுக்கு பதிலாக கூடுதல் 100 வாட்ஸ் எல்இடி ஒளித்திறன் கொண்ட 92 எண்ணிக்கையிலான தெரு மின் விளக்குகள் மாற்றி அமைக்கப்பட்டன.
புதிய கடற்கரையில் உள்ள 2 எண்ணிக்கையிலான உயா்கோபுர மின்விளக்குகளில் உள்ள 200 வாட்ஸ் எல்இடி விளக்குகளுக்கு பதிலாக 400 வாட்ஸ் எல்இடி விளக்குகளும், புதியதாக 2 சிறிய அளவிளான மின்கோபுர விளக்குகளும், 1,350 மீட்டா் மின்கம்பி வடங்கள் அமைக்கப்பட்டன. இந்த விளக்குகளின் பயன்பாட்டை பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்தாா்.
முன்னதாக, நாகை நகராட்சி பழந்தெருவில் உள்ள யுபிபிசி திடலில் நடைபெற்ற இஃப்தாா் ரமலான் நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கௌதமன், நாகை நகா்ன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, நகராட்சி ஆணையா் டி. லீனா சைமன், நகா்மன்றத் துணைத்தலைவா் செந்தில்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.