நாசாவில் உயர்பொறுப்பில் உள்ள 2,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிரம்ப் அரசு முடிவு!
நாசாவில் உயர்பொறுப்பில் இருக்கும் 2,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அமெரிக்க பொருள்களுக்கு வரிவிதிக்கும் நாடுகளுக்கு கடுமையான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையில், செலவீனங்களைக் குறைக்கும் வகையில் புதியதாக அமெரிக்க செயல் திறன் துறை (டாக்ஜ்) ஒன்றையும் உருவாக்கி அதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க்கையும் தலைவராக நியமித்திருந்தார். கடந்த சில வாரங்களாக இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் போக்கு காரணமாக அந்தப் பொறுப்பில் இருந்து எலான் மஸ்க் விலகினார்.
இதற்கிடையில், செலவினங்களைக் குறைக்கும் நோக்கில் அமெரிக்காவின் விண்வெளி மையமான நாசாவில் வேலை பார்த்துவரும் உயர்பொறுப்பு ஊழியர்கள் 2,145 பேரை பணி நீக்கம் செய்ய டிரம்ப் அரசு முடிவெடுத்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன.
இந்த அதிரடி முடிவு ஊழியர்கள் மட்டுமின்றி, அமெரிக்காவின் எதிர்கால ஆராய்ச்சி மற்றும் ஆய்வுகளைக் கடுமையாகப் பாதிக்கப்படும் என கருதப்படுகிறது. வருகிற 2026 ஆம் ஆண்டில் மனிதர்களைச் சந்திரனுக்கு அனுப்பும் பணியிலும் நாசா ஈடுபட்டுள்ளது.
இந்தப் பணிகள் கடுமையாகப் பாதிக்கும் என்றும் நிபுணர்கள் கருதுகின்றனர். இந்தத் திட்டத்துக்கு முன்னதாக பணி நீக்க நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2,000 க்கும் மேற்பட்ட வெளியேறும் ஊழியர்களில், கிட்டத்தட்ட அனைவரும் ஜிஎஸ்-13 முதல் ஜிஎஸ்-15 பதவிகளில் உள்ளனர். கென்னடி விண்வெளி மையத்தைச் சேர்ந்த 311 ஊழியர்களும், ஜான்சன் விண்வெளி மையத்தைச் சேர்ந்த 366 ஊழியர்கள் உள்பட விண்வெளிப் பயணம் போன்ற பணிப் பகுதிகளில் பணியாற்றும் 1,818 ஊழியர்களும், ஐடி, மேலாண்மை, நிதி போன்ற துறைகளில் வேலை பார்க்கும் ஊழியர்களும் இவர்களில் அடங்கியுள்ளனர்.
நாசாவில் செலவினங்களை குறைக்கும் வகையில் டிரம்ப் நிர்வாகம் 6 பில்லியன் டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.5 லட்சம் கோடி) வரை குறைக்கத் திட்டமிட்டள்ளது. இதனால், பணியாளர்களை நீக்கும் அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மொத்தமாக 2000-க்கு மேற்பட்டோர் பணி நீக்கம் செய்யப்படும் நடவடிக்கை சந்திரனுக்கான விண்வெளிப் பயணம், மனிதர்களை செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்புதல் போன்ற திட்டங்களைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளது.
NASA Layoffs To Affect Over 2,000 Senior Employees. Reason: Trump Budget Cuts
இதையும் படிக்க :ஆக்ஸியம்-4: விண்வெளியில் 100 லட்சம் கி.மீ. பயணித்த வீரா்கள்; 230 சூா்யோதங்களைக் கண்டனா்