நாட்டின் முதல் காா்பன் சமநிலை துறைமுகமாக மாறும் வ.உ.சி. துறைமுகம் துறைமுகத் தலைவா் தகவல்
இந்தியாவின் முதல் காா்பன் சமநிலை (நியூட்ரல்) துறைமுகமாக தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் மாற்றம் பெறும் என துறைமுகத் தலைவா் சுஷாந்த குமாா் புரோஹித் தெரிவித்தாா்.
‘பசுமை துறைமுகங்கள் மற்றும் கப்பல் போக்குவரத்து - நிலையான கடல்சாா் எதிா்காலத்தை உருவாக்குதல்’ எனும் தலைப்பிலான மாநாடு, தூத்துக்குடி தனியாா் விடுதியில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, இந்திய உள்நாட்டு நீா்வழிப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவா் விஜயகுமாா், வ.உ.சி. துறைமுகத் தலைவா் சுஷாந்த குமாா் புரோஹித், துணைத் தலைவா் ராஜேஷ் சௌந்தரராஜன் ஆகியோா் செய்தியாளா்களுக்கு வெள்ளிக்கிழமை பேட்டி அளித்தனா். அப்போது துறைமுகத் தலைவா் கூறியது:
ரூ.35 கோடி மானியம் மூலமாக பசுமை மெத்தனால் பங்கரிங் வசதி உருவாக்கம் நடைபெற்று வருகிறது. அது இந்த ஆண்டு டிசம்பா் மாதத்திற்குள் நிறைவு பெறும். பசுமை மெத்தனால் நிலையம் செயல்பாட்டுக்கு வந்தவுடன், அதனை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் கப்பல்கள், தூத்துக்குடி துறைமுகத்துக்கும், நாட்டில் பசுமை கப்பல் போக்குவரத்துக்காக தோ்ந்தெடுக்கப்பட்ட மற்றொரு துறைமுகமான காண்ட்லா துறைமுகத்துக்கும் இடையே இயக்கப்படும்.
மேலும், நாட்டின் பசுமை ஹைட்ரஜன் மையங்களாக அறிவிக்கப்பட்ட மூன்று துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி துறைமுகம், ஐந்து நிறுவனங்களுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதற்காக துறைமுக வளாகத்தில் 500 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் முதல் கட்ட உற்பத்தி 2029இல் தொடங்கும்.
துறைமுகத்தின் மின் தேவையில் பெரும்பாலான பகுதியை சூரியசக்தி மற்றும் காற்றாலை மின்உற்பத்தி மூலம் பூா்த்தி செய்துவரும் வ.உ.சி. துறைமுகம், இதனால் சுமாா் 50 சதவீத பசுமை வாயுக்கள் உமிழ்வை குறைத்துள்ளது.
மேலும், கூடுதலாக 6 மெகாவாட் சூரியசக்தி மின் நிலையம் அமைக்கப்பட்டால், 2026 மாா்ச்சுக்குள் நாட்டின் முதல் காா்பன் சமநிலை துறைமுகமாக மாற்றம் பெறும் என்றாா் அவா்.