நாட்டு மாடுகளை அழிக்கத்தான் நவீன விவசாயம்! சீமான் பேச்சு!
மதுரையில் 'மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை' என்ற தலைப்பில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆடு, மாடுகளின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு நடைபெற்றது.
விராதனூர் கிராமத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆயிரக்கணக்கான மாடுகள் இருக்கும் இடத்தில் சுற்றி இரும்பு வேலிகள் அமைத்து, அதன் முன்பாக ஒரு மேடை அமைத்து, மாடுகளுக்கு முன்பாக கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உரையாற்றினார்.
மாநாட்டில் சீமான் பேசுகையில், மேற்கு தொடர்ச்சி மலையில் தொடங்கி கோவை வரையில் மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை தமிழர்கள் வளர்த்து வந்தனர். ஆனால், இன்று கனிமவளக் கொள்ளையால் மேய்ச்சல் நிலங்கள் பாதிக்கப்படுவதால், நாட்டின மாடுகள் அழிந்து விட்டன. ஆடு, மாடுகளை திருடுபவர்கள், இன்று மேய்ச்சல் நிலங்களையே திருடுகின்றனர். இதை எங்கே போய் சொல்வது என்று மாடுகள் கேட்கின்றன.
விவசாயத்துக்காகத்தான் டிராக்டர் கொண்டுவரப்பட்டது. ஆனால், டிராக்டர்களைப் பயன்படுத்துவதற்காக ஆயிரக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டன. நாட்டு மாடுகளை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டுத்தான், நவீன விவசாயம் கொண்டு வரப்பட்டது.
ஆயிரக்கணக்கான மாடுகள் கொன்று குவிக்கப்பட்டன. அதனால்தான் இன்று உலக நாடுகள் பால் உற்பத்தியில் முன்னிலையில் இருக்கும் நிலையில் இந்தியா பின்தங்கி இருக்கிறது. மாடுகளை அழித்து விட்டால் இறைச்சிக்கும் பாலுக்கும் எங்கே போவது. தமிழகத்தின் கன்னியாகுமரி தொடங்கி தென்காசி, தேனி, திண்டுக்கல், கோவை வரையிலான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனிமவளக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் மேய்ச்சல் நிலங்கள் அருகி வருகிறது. இது தொடர்பாக கேள்வி கேட்டால் நம்மை விமர்சிக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான மாடுகள் கொல்லப்பட்டதால்தான், பால் உற்பத்தியில் இந்தியா பின்தங்கிய நிலையில் உள்ளது. மாடுகளை அழித்து விட்டால், இறைச்சிக்கும் பாலுக்கும் என்ன செய்வது? 2022 -23 ஆம் ஆண்டில் மாட்டிறைச்சி மூலம் ரூ.28,000 கோடி, 2023-24 ஆண்டில் ரூ.30,000 கோடியும் நாட்டுக்கு வருவாய் கிடைத்துள்ளது. இந்தியாவின் பால் சந்தை மதிப்பான ரூ.13.5 லட்சம் கோடியில் ஒரு லட்சத்து இருபத்து எட்டாயிரம் கோடியை தமிழ்நாடு பங்களிக்கிறது.
ஆடு, மாடு மேய்ப்பது தொழில் அல்ல; எங்கள் பண்பாடு, கலாச்சாரம். மாட்டுக்கு பொங்கல் வைத்து கொண்டாடுபவன்தான் தமிழன். ஆடு, மாடு மேய்ப்பது என்ன கேவலமா? அது கேவலம் என்றால், இறைச்சியும் பாலும் எப்படி கிடைக்கும்? வெளிநாடுகளில் ஹெலிகாப்டர்களை வைத்து மாடு மேய்க்கின்றனர்.
நாட்டின மாடுகளை அழிப்பதற்காகக் கொண்டுவரப்பட்ட ஜல்லிக்கட்டு மீதான தடையையே இன்னும் முழுதாக நீக்கவில்லை என்று தெரிவித்தார்.